×

மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்

 

கோவை, ஜூலை 4: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிபிஜி கலை கல்லூரியில் சுவாகதம் என்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்வில், பிபிஜி கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி தங்கவேலு, கல்லூரி முதல்வர் முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களிடம் பேசியதாவது: கல்லூரி என்பது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இடம். கல்வி கற்பது, விளையாட்டு, இசை மற்றும் இலக்கை நோக்கி செல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான் உண்மையானது.

போதை பொருட்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட தவறான வழியில் கிடைக்கும் தற்காலிக மகிழ்ச்சி தேவையற்றது. முதல் நாளில் இருந்து உங்கள் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி செல்ல வேண்டும். அதற்கான பாதையை கண்டறிய வேண்டும். இலக்கை நிர்ணயிக்க உங்களின் பெற்றோர், ஆசிரியர் அறிவுரைகள், ஆலோசனைகள், அனுபவங்கள் கட்டாயம் தேவை.

உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும் வகையிலான சரியான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். போதை பழக்கம் என்பது உடன் இருப்பவரின் அழுத்தம் காரணமாகத்தான் ஏற்படுகிறது. இதனை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் தெரியாத நபர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. திறமை இருக்கும் நபருக்குதான் வேலை கிடைக்கும் என்பதை புரிந்து மாணவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,PPG Arts College ,Saravanampatti ,Swagatham… ,Dinakaran ,
× RELATED வடக்கு மண்டலம் பகுதியில் புதிய...