×

உண்ணி செடி குச்சிகளால் யானை உருவங்கள் செய்யும் நீலகிரி பழங்குடி இளைஞர்களுக்கு இங்கிலாந்து மன்னர் விருது

ஊட்டி: உண்ணி செடி குச்சிகளால் யானை உருவங்கள் செய்யும் நீலகிரி பழங்குடி இளைஞர்களுக்கு இங்கிலாந்து மன்னர் விருது வழங்கினார். இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் எலிபெண்ட் பேமிலி என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஆசிய யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துடன் இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர் பகுதிகளில் வனம் மற்றும் சாலையோரங்களில் காணப்படும் எதற்கும் பயன்படாத லேண்டானா எனப்படும் உண்ணி செடி குச்சிகளை பயன்படுத்தி யானைகள் உருவங்களை உருவாக்க தொரப்பள்ளி பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு பயிற்சியை அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற்ற பழங்குடிகள் கலை நயத்துடன் யானைகள் மற்றும் இதர உருவங்களையும் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டு வரும் பெட்ட குரும்பர் பழங்குடியினத்தை சேர்ந்த ரமேஷ் மாறன், விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு கடந்த 29ம் தேதி இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்க் சண்ட் என்ற விருது வழங்கப்பட்டது. இவ்விருதை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமீலா ஆகியோர் வழங்கினர். இதே விழாவில் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்தின் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கும் விருது வழங்கப்பட்டது. பழங்குடியின இளைஞர்கள் இருவருக்கு இங்கிலாந்து மன்னர் விருது அளித்து கவுரவித்துள்ளது நீலகிரி பழங்குடிகளுக்கு கிடைத்த கவுரவம் மற்றும் அங்கீகாரம் என பழங்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

The post உண்ணி செடி குச்சிகளால் யானை உருவங்கள் செய்யும் நீலகிரி பழங்குடி இளைஞர்களுக்கு இங்கிலாந்து மன்னர் விருது appeared first on Dinakaran.

Tags : King of England ,England ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை