×

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய் கடிக்கான மருந்துகள் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் மாநில குளிர்பதன மருந்து கிடங்கின் கூடுதல் கட்டிடம், மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு, மாநில அளவிலான மின் அலுவலக சேவைகள் உள்ளிட்டவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மருந்து விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு மாநில அளவில் உருவாக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. பாம்புக்கடி மற்றும் நாய் கடிக்கான மருந்துகள் இதற்கு முன்பு வட்டார அரசு மருத்துவமனைகளிலும், மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கப்பட்ட மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலம், மருந்துகளின் இருப்பை எளிதாக கண்காணிக்கலாம். உயிர் காக்கும் மருந்துகளான நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள், தொற்றா நோய்களுக்கான மருந்துகள், மாத்திரைகள் இருப்பு கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும். மேலும் பொது சுகாதாரத் துறையில், மின்-அலுவலக சேவைகளை மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு 11 வகை தடுப்பூசிகள் அளிப்பதன் மூலம் 12 வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். இதனை மேலும் மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.1 கோடி 20 லட்சம் செலவில் கூடுதலாக 2 குளிர் பதன அறைகள் மற்றும் 2 உறை நிலை வைப்பு அறைகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய் கடிக்கான மருந்துகள் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Directorate of Public Health and Disease Prevention Medicines Department ,Chennai, TMS ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...