×

முக்கொம்பு அணை பூங்காவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணை பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருச்சியில் உள்ள சுற்றுலா மையங்களில் ஒன்று முக்கொம்பு அணை. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், முக்கொம்பு வந்தடைகிறது. பின்னர் இங்கிருந்து கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். பண்டிகை காலங்களில் திருச்சி மாவட்ட மக்கள் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு அதிகளவில் வந்து செல்வார்கள். அவர்களின் வசதிக்காக இங்கு விளையாட்டு சாதனங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 12ம் தேதி அன்று மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர கடந்த மாதம் 16ம்தேதி முக்கொம்பு வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இப்போது முக்கொம்பு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசிக்க சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். விடுமுறை நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் குடுமபத்துடன் வந்து முக்கொம்பு அணையை பார்த்து ரசித்தும், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்து உற்சாகம் அடைகின்றனர். முக்கொம்பு அணையில் தண்ணீர் கடல்போல் காட்சியளிப்பதால் மீன்களும் அதிகளவில் இருக்கின்றன. உள்ளூர் மீனவர்கள் சிலர் அணையின் மேல் பகுதியில் இருந்து வலையை வீசி மீன்களை பிடிக்கின்றனர். அவர்கள் பிடிக்கும் மீன்கள் முக்கொம்பு எல்லீஸ் பூங்கா அருகில் குவித்து போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள இந்த வேளையில் பூங்காக்களில் உள்ள ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. எல்லீஸ் பூங்காவில் உள்ள சிறுவர், சிறுமிகளின் பொழுதுபோக்கு அம்சமான ரயில் நிலையம் பழுதடைந்து உள்ளது. அருகில் உள்ள மற்ற பகுதிகளில் குப்பைகள் கிடக்கின்றன. இந்த காட்சிகள் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. நீண்டநேரம் விளையாடி மகிழலாம் என்று எண்ணி வருபவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சில பழுதடைந்து பராமரிப்பின்றி கிடப்பதால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க முக்கொம்பு அணையில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

The post முக்கொம்பு அணை பூங்காவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mukkombu Dam Park ,Trichy ,Trichy Mukkombu Dam Park ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு