×

சோழவந்தானில் நிற்காமல் செல்லும் ரயில்கள்; இரவு நேர ரயில் சேவை போதிய அளவில் கிடைக்குமா?.. எதிர்பார்ப்பில் 50 கிராம மக்கள்

சோழவந்தான்: சோழவந்தான் ரயில் நிலையத்தில் இரவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மதுரை மாவட்ட அளவில் முக்கிய ரயில் நிலையங்களில் சோழவந்தானும் ஒன்று. இப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வைகை, குருவாயூர், நெல்லை, மைசூரு ஆகிய நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஆறு பாசஞ்சர் ரயிலும் நின்று செல்கிறது. சென்னைக்கு பகலில் வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும், இரவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலும் உள்ளது. பகல் நேரத்தில் பிரச்னை இல்லை என்றாலும், இரவில் செல்பவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் சோழவந்தானில் இரவு நின்று சென்ற போது சிரமமின்றி பயணிகள் சென்று வந்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன் இதை ரத்து செய்து, அதற்கு பதிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நின்று செல்ல ரயில்வே துறை உத்தரவிட்டது. ஆனால் திருநெல்வேலியிலிருந்து வரும் இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால், முன்பதிவில்லா பயணிகள் இதில் ஏறவே முடிவதில்லை. இதனால் இந்த ரயில் இங்கு நின்றாலும் பயணிகளுக்கு உரிய பலனில்லை. பெரும்பாலும் சென்னையில் பல்வேறு அலுவல் பணிகளுக்கு செல்பவர்கள் இரவு நேர ரயில்களில் சென்று, பகலில் வேலைகளை முடித்து இரவு அங்கிருந்து மீண்டும் திரும்புவர். தற்போது அதற்குரிய ரயில் சேவை கிடைக்காததால், மதுரை மற்றும் திண்டுக்கல் வழியாக கூடுதல் கட்டணம் செலுத்தி பேருந்தில் சிரமத்துடன் பயணம் செய்யும் நிலை உள்ளது.

கடந்த சில மாதங்களாக நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் போது இங்கு அதிகாலை 4 மணியளவில் நின்று செல்வதையும் ரத்து செய்து விட்டனர். எனவே பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயிலை மீண்டும் இங்கு நின்று செல்ல அனுமதிக்க வேண்டும். அல்லது பொதிகை, சென்னை, முத்துநகர், அனந்தபுரி ஆகிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்றை சோழவந்தானில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த 50 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திமுக வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், ‘‘தென்னக ரயில்வேயின் மதுரை மண்டலத்தில் முக்கிய ரயில் நிலையமாக சோழவந்தான் உள்ளது. மேலும் இம்மண்டலத்தில் விரிவாக்கம் செய்ய தேர்வான 15 ரயில் நிலையங்களில், சோழவந்தானும் ஒன்று. இதன்படி இங்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கியுள்ளது.

இத்தகைய ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் போதிய ரயில் சேவை இல்லை. மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்து, அதற்கு பதிலாக நிறுத்தும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் போதிய இடம் கிடைப்பதில்லை. அதுவும் ஒரு வழித்தடத்தில் நிற்பதில்லை. ஆகையால் இரவில் சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களை இங்கு நின்று செல்ல அனுமதிக்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் எனும் முன்பதிவில்லா ரயிலையும் இங்கு நின்று செல்ல அனுமதிக்க வேண்டும். இதில் போதிய இடம் கிடைப்பதுடன், தஞ்சாவூர் பகுதிக்கு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

மேலும் கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட திருநெல்வேலி – மயிலாடுதுறை ரயில் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படுகிறது. அதுவும் சோழவந்தானில் நின்று செல்வதில்லை. மதுரையில் நடைபெற்ற ரயில்வே துறை கூட்டங்களில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களை இங்கு நின்று செல்ல வேண்டி, எங்கள் எம்எல்ஏ வெங்கடேசனும் பல முறை வலியுறுத்தியுள்ளார். எனவே இப்பகுதியில் வசிப்போர் மட்டுமின்றி, உசிலம்பட்டி, செக்கானூரணி, வாடிப்பட்டி மக்களின் நலனுக்காகவும் ரயில்வே நிர்வாகம் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் எம்.பியால் 2 ரயில்கள்…
தேனி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஆரூண், அப்போதைய ரயில்வே அமைச்சரும், தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்தி வைகை, குருவாயூர் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களை சோழவந்தானில் நின்று செல்ல ஏற்பாடு செய்தார். இதனால் பகல் நேரத்தில் சிரமமின்றி பயணம் செய்ய முடிகிறது. ஆனால் அடுத்து வெற்றி பெற்ற அதிமுக எம்.பிக்கள் பார்த்திபன் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோரால், ஒரு புதிய ரயில் சேவையும் சோழவந்தானுக்கு கிடைக்கவில்லை. ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்கும் எம்.பி ரவீந்திரநாத், இங்கு மீண்டும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை மட்டுமாவது நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சோழவந்தானில் நிற்காமல் செல்லும் ரயில்கள்; இரவு நேர ரயில் சேவை போதிய அளவில் கிடைக்குமா?.. எதிர்பார்ப்பில் 50 கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Cholawanthan ,Railway ,Pandian Express ,Cholawandan ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை வாழை, நெற்பயிர்கள் சேதம்