×

சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை வாழை, நெற்பயிர்கள் சேதம்

*விவசாயிகள் வேதனை

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வாழை, நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அதிகபட்சமாக 108 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த சூழலில், கடந்த 3 நாட்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை மழை வலுவாக பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2 நாட்களாக சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கனமழைக்கு சோழவந்தான் அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி சசிக்குமார், தனது மூன்றரை ஏக்கர் பயிரிட்டிருந்த நாட்டு வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயி சசிக்குமார் கூறுகையில், ‘‘நடவு முதல் தற்போது வரை சுமார் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கி வாழை பயிரிட்டிருந்தேன். ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து சாய்ந்து விட்டன. இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க வழியின்றி பரிதவித்து வருகிறேன். அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

சோழவந்தான் மோகன்ராஜ், சி.புதூர் பிலிச்சியம்மாள் ஆகியோர் பயிரிட்டிருந்த வாழைகளும் சேதமடைந்துள்ளன. சி.புதூரில் பனைமரம் முறிந்து விழுந்ததில், புலியக்கோன் என்பவரின் மாட்டுக்கொட்டகை சரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் மன்னாடிமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதற்கிடையே, உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் கிணற்று பாசன உதவியுடன் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இவற்றில் நெற்பயிர்கள் விளைச்சல் அடைந்து விரைவில் அறுவடை செய்யும் நிலை இருந்தது.

கடந்த இரு தினங்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதன்படி வின்னகுடி, கல்கொண்டான்பட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் செல்ல முறையான வாடிகால் வழியில்லாமல் இருப்பதால், வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

The post சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை வாழை, நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Cholawandan ,Madurai district ,Cholavandan ,Dinakaran ,
× RELATED சோழவந்தானில் உலக நன்மை வேண்டி யாக பூஜை