புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மற்றும் 8 பேர் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டதை அடுத்து, பாஜவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி உள்ளன. ஜெய்ராம் ரமேஷ் (காங். பொதுச் செயலாளர்): பாஜவின் வாஷிங் மெஷின் மீண்டும் செயல்பட் தொடங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான கூட்டணியில் இன்று புதிதாக சேர்ந்துள்ள பலர் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள். அவர்கள் அனைவரும் இப்போது புனிதமாகி விட்டனர்.
அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதல்வர்): இன்று மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், பணபலம் மற்றும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜ ஒழிக்க விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பாஜ எவ்வளவு முயற்சி செய்தாலும், ஜனநாயகத்தை கொல்லும் இந்த முயற்சிகளை முறியடிக்கும் நேரம் வரும்போது அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர் பபுல் சுப்ரியோ (திரிணாமுல் காங்.,): ஊழல்வாதிகளை அமைச்சராக்கிய பிறகு பாஜவும், பிரதமர் மோடியும் இனி ஊழலுக்கு எதிராக போராடுவது பற்றி பேச முடியாது. ஊழல் கறை படிந்த தலைவர்கள் இப்போது தங்கள் கறையை போக்க பாஜவின் வாஷிங்மெஷினில் இணைந்துள்ளனர்.
பிரியங்கா சதுர்வேதி (உத்தவ் தாக்கரேவின் சிவசேனா): கொள்கைகள் கெட்டுவிட்டது. கருத்தியல் கூட்டணி பற்றி பேசும் நாட்டின் கடைசி கட்சியாக பாஜ இருக்க வேண்டும். அவர்கள் அதிகாரத்தை விரும்பும் அரசியல் சந்தர்ப்பவாதிகள். அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சி தலைவர்): மத்தியப் பிரதேசத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா பாஜவின் பெரிய ஆய்வகமாக உருவெடுத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக அவர்கள் ஆட்சியை தக்க வைக்க இன்னும் பல சோதனைகளை செய்வார்கள். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
டிகேஎஸ் இளங்கோவன் (திமுக): பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு பாஜ பயப்படுகிறது. அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சிகளை உடைக்க விரும்புகிறார்கள்.
ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்): பாஜவுக்கு மக்கள் சக்தியில் நம்பிக்கை இல்லை, அவர்கள் கட்சித் தாவல் அரசியலை மட்டுமே நம்புகிறார்கள். இந்த முறை அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கிடைக்கும்.
மெகபூபா முப்தி (பிடிபி கட்சி தலைவர்): மகாராஷ்டிராவில் மக்கள் ஆணையை பாஜ மீண்டும் மீண்டும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதத்தை கண்டிக்க வார்த்தைகள் போதாது. ஜனநாயகம் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற அவமானகரமான செயல்களுக்கு மறைமுகமாக தேசிய கீதத்தை பயன்படுத்துகின்றனர். ஒருபுறம், பாஜ அரசியல் எதிரிகளை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்கிறது, மறுபுறம் அவர்களே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேட்டையில் ஈடுபடுகின்றனர். பாஜவின் அதிகார தாகத்தை தீர்க்க மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர்): நாட்டின் மிகப்பெரிய ஊழல் பேர்வழி நரேந்திர மோடி. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்த 2 நாட்களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜ கூட்டணி அரசில் துணை முதல்வராக அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். புஜ்பாலும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மோடியை கண்டிக்கும்.
* சரத் பவாருக்கு கார்கே, ராகுல் ஆதரவு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘பாஜவின் மோசமான அரசியல் சூழ்ச்சி மகாராஷ்டிராவில் அத்துமீறி செயல்படுகிறது. இது சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. மாறாக, அமலாக்கத்துறை உதவியுடன் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு, ஊழல் மற்றும் பாவத்தின் அறுவடை. இந்த சமயத்தில் கார்கே, ராகுல் ஆகியோர் சரத்பவாருடன் பேசி தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்’’ என கூறி உள்ளார்.
The post எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் பாஜவின் ‘வாஷிங் மெஷின்’மீண்டும் ஆரம்பித்து விட்டது appeared first on Dinakaran.
