×

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை விழிப்புணர்வு: செங்கை கலெக்டர் துவக்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் நேற்று மாலை எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், எதிர்கால தலைமுறையினருக்கான ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்து விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ராகுல்நாத் பேசியதாவது: ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை உலக சுகாதார மையம் மிக எளிமையாக விளக்கியுள்ளது. ஆரோக்கியம் என்பது (உடல்-மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதாகும். சமுதாயம் அனைத்தையும் அரவணைத்து இருப்பதன் மூலம்தான் அறிய முடியும். இக்காலகட்டத்தில் ஆரோக்கிய வாழ்க்கை என்பது கனவாகிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம், நம் வாழ்க்கை முறைதான். வாழ்க்கைமுறை மாற்றங்களினால் தொற்றாநோய்கள் மிகப்பெரிய தாக்கத்தை அதிகளவில் உண்டாக்குகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 50 சதவீத மக்களுக்கு சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு உள்பட பல்வேறு தொற்றாநோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக தாக்குகிறது.

இந்தியாவில் சுமார் 100 மில்லியன்‌ மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் இந்தியாவில்தான் அதிகளவு சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கப் போகிறார்கள். இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கி, ஒரு தனிப்பட்ட மனிதனின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியையும் குறைந்துவிடும். எனவே, இப்பிரச்னையை அனைவரும் அறிந்து, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளமை காலத்திலேயே அவற்றை தடுக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

இதில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தீர்த்தலிங்கம்,  ரங்கா மருத்துவமனை மேலாண் இயக்குநர் பிச்சுமணி, செயல் இயக்குநர் அனுராதா, மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை விழிப்புணர்வு: செங்கை கலெக்டர் துவக்கினார் appeared first on Dinakaran.

Tags : Brick Collector ,Chengalputtu ,Chengalputtu Nagar ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து