×

வடமாநிலங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிரபல தாதாக்கள் அந்தமான் சிறைக்கு மாற்றம்?: உள்துறையுடன் என்ஐஏ ஆலோசனை

புதுடெல்லி: வடமாநிலங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிரபல தாதாக்களை அந்தமான் சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து உள்துறை அமைச்சகத்துடன் என்ஐஏ ஆலோசனை நடத்தி வருகிறது. வடமாநிலங்களில் கொலை, கொள்ளை, தீவிரவாத செயல்படுகளில் ஈடுபட்டு வந்த அதி தீவிர குற்றவாளிகள் டெல்லியின் திகார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 முதல் 12 தாதாக்கள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

சிறைக்குள் இருக்கும் இவர்களால், மற்ற கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சிறைக்குள் நடக்கும் மோதலுக்கு இவர்களே காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து டெல்லி, பஞ்சாப், அரியானா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 10 முதல் 12 தாதாக்களை வேறொரு சிறைக்கு இடமாற்றம் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகத்துடன், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆலோசனை நடத்தியது. அதன்படி, மேற்கண்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளை, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, உள்துறை அமைச்சகத்திற்கு என்ஐஏ எழுதிய கடிதத்தில், வடமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 25 தாதாக்களை தென் மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த பட்டியலில் பஞ்சாபி பாடகர் சித்து முஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயும் அடங்கும். ஏற்கனவே காலிஸ்தான் ஆதரவு அமைப்பை சேர்ந்த வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் தற்போது அசாமின் திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் அந்தமான் சிறைக்கு மாற்ற ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வடமாநிலங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிரபல தாதாக்கள் அந்தமான் சிறைக்கு மாற்றம்?: உள்துறையுடன் என்ஐஏ ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Andaman ,NIA Consulting with Interior ,New Delhi ,NIA ,Ministry of Home Affairs ,Andaman Jail ,NIA Consulting ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...