×

உத்தமபாளையத்தில் பைபாஸில் பறக்கும் தொலைதூர அரசு பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லுமா?.. அசுரவேக தனியார் பஸ்களுக்கு கடிவாளமிட கோரிக்கை

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் புதிய நான்கு வழிச்சாலை பைபாஸ் வழியே ெசல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையம் தாலுகா தலைநகரமாக உள்ளது. உத்தமபாளையம் நகரம் அதிகமான அரசு அலுவலகங்ளையும், அதிகமான விவசாய கூலி தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.

இதேபோல், உத்தமபாளையம், தேவாரம், பண்ணை புரம், கோம்பை, மற்றும் இதனை சுற்றியுள்ள 10 கிராமங்கள் அதேபோல் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, மற்றும் இதனை சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் உத்தமபாளையத்திற்கு வருகின்றனர். குறிப்பாக இங்கு வந்தால் 24 மணிநேரமும் பஸ்கள் கிடைக்கும். ஆனால் இந்த நிலை சமீப நாட்களாக மாறிவருகிறது.

குறிப்பாக மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி. கன்னியாகுமரி, அந்தியூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கு உத்தமபாளையம் பிரதான வழித்தடமாக இருப்பதால் இங்கு வந்து தான் தொலைதூர ஊர்களுக்கு செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. குறிப்பாக இது உத்தமபாளையம் நகருக்கள் வராமல், அனுமந்தன்பட்டி வழியேயும், தேனியில் இருந்து வரக்கூடிய அரசு தொலைதூர பஸ்கள், இரவு நேரங்களில் உத்தமபாளையம் வராமல் புதிய பைபாஸ் வழியே சென்று விடுகின்றன.

இதனால் உத்தமபாளையத்தில் தினந்தோறும் தொலைதூர பஸ்களுக்காக காத்துக் கிடக்கக்கூடிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் இந்த நிலை ஏற்பட்டால், அடுத்து வரக்கூடிய வேறு அரசு பஸ்களில் ஏறி தேனிக்கு சென்று அங்கிருந்து மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் இரவு நேரங்களில் குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் பாளையம் நகரை புறக்கணித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு, அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், உத்தமபாளையத்தில் அதிகமான பயணிகள் அரசு பஸ்களில் ஏறி செல்வது வழக்கம். அரசு பஸ்களின் இச்செயல் காரணமாக, தனியார் பஸ்களில் ஏற வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதுபோல், மதுரையிலிருந்து தேனி செல்லும் தனியார் பஸ்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. அரசு பஸ்களில் பயணிகளை ஏற்றுவதற்க்கு முன் தங்கள் பஸ்களில் ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சொன்ன கட்டளைக்கு கட்டுப்பட்டு எதிரில் வரும் வாகனங்களை கண்டு கொள்ளாமல் அதிக ஒலியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் இப்பகுதியில் வாகன விபத்து தொடர் கதையாகிறது.

தனியார் பஸ்கள் மீது வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், கூடுதலான தனியார் பஸ்களின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதாக பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மதுரையிலிருந்து தேனிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களால் இந்த வழித்தடத்தில் ஏராளமான விபத்துகள் நடந்து உள்ளது. காரணம் அந்த தனியார் பஸ்களுக்கு போதுமான நேரம் இல்லாததால் அசுர வேகத்தில் வந்து செல்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தடுப்பு கம்பிகள் போடப்பட்டிருந்தாலும், சில தனியார் பஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தங்களது பஸ் ஹெட்லைட்டை போட்டபடியே முன்னேறி வருகிறது.

இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பதற்றத்தில் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கின்றனர். தடுப்பு கம்பி போட்டதின் நோக்கமே வாகனத்தின் வேகத்தை குறைத்து,விபத்தை தவிர்க்க என்ற நிலைமாறி தற்போது தடுப்பு கம்பிகளால் அதிக விபத்து ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. இதற்கு காரணம் தனியார் பஸ்களின் கண் மூடித்தனமாக வேகம் தான் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

புதிய போக்குவரத்து திட்டங்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும்  மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய போக்குவரத்து திட்டங்கள், புதிய வழித்தடங்கள் அரசு பஸ் இயக்கம், குடிநீர் திட்ட பணிகள், அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேகத்தில் படுஜோராக நடந்து வருகிறது. அதுபோல், உத்தமபாளையத்தில் புதிய நான்கு வழிச்சாலை பைபாஸ் வழியே ெசல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வேகக்கட்டுப்பாடு கருவி அவசியம்
வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் தனியார் பஸ்கள் அதிக வேகத்துடன் செல்கின்றன.குறிப்பாக தடுப்பு கம்பி போடப்பட்டிருந்தாலும் எதிர் திசையில் வரும் வாகனங்களை மதிக்காமல் கண் மூடித்தனமான வேகத்தில் ஹெட்லைட்டை எரிய விட்டு கொண்டு செல்கின்றன. தனியார் பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவியை மாதந்தோறும் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். தனியார் பஸ்களில் பத்து ஹெட்லைட் வரை எரியவிட்டு கொண்டு பஸ்களை இயக்குவதால் எதிரில் உள்ள வாகனங்களுக்கு பாதை தெரிவதில்லை .தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.’’ என்றனர்.

எந்தெந்த பைபாஸ் சாலைகள்
உத்தமபாளையத்தில் இருந்து, அனுமந்தன்பட்டி பைபாஸ், சின்னமனூர் – சீலையம்பட்டி அவுட்டர், வீரபாண்டி பைபாஸ் என ஊருக்குள் வராமல் செல்லும், தனியார் மற்றும் தொலைதூர அரசு பஸ்களால் மக்கள் திண்டாட்டம் அடைகின்றனர். மறுபுறம் முகூர்த்த காலங்களிலும், திருவிழாக்கள் நிறைந்த காலங்களிலும் புறக்கணிப்பு தொடர்கிறது. வெளிமாவட்ட டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், அதிகளவில் இப்படியான புறக்கணிப்பை செய்கிறது.

எனவே, இரவு நேரங்களில் வரைமுறை மிகவும் அவசியம்.பொதுமக்கள் எந்த வகையிலும் திண்டாடக்கூடாது என தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் ஒருசில ஓட்டுநர்கள் எடுக்கும் தன்னிச்சையாள முடிவுகள் இப்படியான செயல்களை செய்கிறது. இதனால் அரசு பஸ்களுக்கு நஷ்டம் உண்டாவதுடன், தேவையில்லாத அதிருப்தி உண்டாகிறது. எனவே உத்தமபாளையம் உள்ளிட்ட முக்கிய ஊர்களை இரவில் புறக்கணிக்கும் அரசு பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post உத்தமபாளையத்தில் பைபாஸில் பறக்கும் தொலைதூர அரசு பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லுமா?.. அசுரவேக தனியார் பஸ்களுக்கு கடிவாளமிட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Utthampalayam ,Dinakaran ,
× RELATED உத்தமபாளையம் அருகே போர்வெல்...