×

கூட்டாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் பணம் கேட்டு மிரட்டியவரையும் கொலை செய்து உடல் ஆற்றில் வீச்சு: வரிச்சியூர் செல்வம் ‘பகீர்’ வாக்குமூலம்

விருதுநகர்: கூட்டாளி கொலை வழக்கில் கைதான ரவுடி வரிச்சியூர் செல்வம், போலீஸ் காவல் முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசாரின் விசாரணையின்போது, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியவரையும் கொலை செய்ததாக வரிச்சியூர் செல்வம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். விருதுநகர், அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(37). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. இவர் தன்னை மீறி செயல்படுவதாக எண்ணிய வரிச்சியூர் செல்வம், கடந்த 2021ல் ஆட்கள் மூலம் சென்னையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

இவ்வழக்கில் தனிப்படை போலீசார் கடந்த ஜூன் 21ம் தேதி வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் நிறைவடைந்ததால் நேற்று அவரை விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கவிதா உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் விசாரணையில், செந்தில்குமாரை சென்னையில் சுட்டு கொலை செய்த 6 பேர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து வரிச்சியூர் செல்வம் தெரிவித்த தகவல் அடிப்படையில் அவர்களை தேடி தனிப்படை சென்னை விரைந்துள்ளது.

மேலும், வரிச்சியூர் செல்வத்துடன் இருந்த மதுரை மாவட்டம் வில்லூரை சேர்ந்த ஈஸ்வரன், அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். தன்னையே மிரட்டும் வகையில் செயல்பட்ட ஈஸ்வரனை 2018ல் தூத்துக்குடியில் வேலை இருப்பதாக அழைத்து சென்று, தூத்துக்குடி டோல்கேட் அருகில் விபத்து ஏற்படுத்தி, கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை அழைத்து சென்ற தனிப்படை போலீசார் தூத்துக்குடி டோல்கேட் மற்றும் ஈஸ்வரனை கொலை செய்து ஆற்றில் வீசிய இடத்தையும் நேற்று முன்தினம் ஆய்வு செய்தாக தகவல் வெளியாகி உள்ளது.

The post கூட்டாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் பணம் கேட்டு மிரட்டியவரையும் கொலை செய்து உடல் ஆற்றில் வீச்சு: வரிச்சியூர் செல்வம் ‘பகீர்’ வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Varichiyur Selvam 'Bagheer ,Virudhunagar ,Rowdy Varichiyur Selvam ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...