×

2021-22ம் கல்வியாண்டுக்கு முன்பு +2 தேர்ச்சி பெற்றவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் சேர ஆளறி சான்று வழங்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 2021-22ம் கல்வியாண்டுக்கு முன்பு பிளஸ்2 தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேர ஆளறிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவும் வெளியானது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் (ஜூன்) 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்காக 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறை சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் கல்வியாண்டுகளில் பிளஸ்2 முடித்தவர்கள், அதற்கான ஆளறிச் சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை.

அவர்களின் தகுதிகள் பள்ளிக்கல்வித் துறையின் ‘எமிஸ்’ புள்ளி விவரங்களின் மூலம் சரிபார்க்கப்படும். அவர்களை தவிர 2021-22-ம் கல்வியாண்டுக்கு முன்பு பிளஸ்2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பிளஸ்2 முடித்ததற்கான ஆளறிச் சான்றிதழை பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2021-22ம் கல்வியாண்டுக்கு முன்பு +2 தேர்ச்சி பெற்றவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் சேர ஆளறி சான்று வழங்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...