×

ஆம்பூர் அருகே நள்ளிரவு பரபரப்பு: மாந்தோப்பில் யானைகள் அட்டகாசம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே நள்ளிரவு ஊருக்குள் புகுந்த யானைகள், மாமரங்களை சேதப்படுத்தியது. தமிழக-ஆந்திர எல்லை பகுதிகளில் உள்ள வனபகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொன்னபல்லி, பைரபள்ளி ஆகிய இடங்களில் இந்த யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல், கரும்பு மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. துருகம் காப்பு காடு பகுதியில் கடந்த வாரம் முகாமிட்டு இருந்த இந்த யானை கூட்டம் நேற்று ஊட்டல் காப்பு காடு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.

நள்ளிரவு ஊட்டல் அடுத்த பைரபள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை ஒட்டி அமைந்துள்ள சுப்பிரமணி என்பவரது நிலத்திற்குள் புகுந்த யானைகள் இன்று அதிகாலை வரை அங்கு முகாமிட்டிருந்தது. அங்கிருந்த மாமரங்களை முறித்தும், மாம்பழங்களை உலுக்கியும் சேதப்படுத்தின. இதுகுறித்து கிராம மக்கள் ஆம்பூர் வன துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் இங்கேயே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post ஆம்பூர் அருகே நள்ளிரவு பரபரப்பு: மாந்தோப்பில் யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Ambur ,Mantop ,Tamil Nadu-Andhra border ,Ampur ,Manthop ,
× RELATED மாந்தோப்பில் 5 யானைகள் அட்டகாசம் பேரணாம்பட்டு அருகே