×

வடிவேலு சினிமா பாணியில் போனில் முகவரி கொடுத்த கிண்டி ஆட்டோ டிரைவர் கொடூர கொலை: மளிகை கடையில் வைத்து சரமாரி வெட்டி சாய்த்தனர்

ஆலந்தூர்: கிண்டி பகுதியில் நேற்றிரவு ஆட்டோவில் வந்த நபரை ஒரு கும்பல் சுற்றிவளைத்து வெட்டிக்கொல்ல முயன்றபோது ஆட்டோவை விட்டுவிட்டு அங்குள்ள மளிகை கடையில் புகுந்தபோது வெட்டி கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். இதுசம்பந்தமாக 8 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை மேற்கு வேளச்சேரி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (எ) வெறி தினேஷ் (25). இவர் ஆட்டோ டிரைவர். நேற்றிரவு கிண்டி வண்டிக்காரன் தெரு வழியாக ஆட்டோவில் வந்தபோது ஒரு கும்பல் அவரை மடக்கியதுடன் பட்டாகத்தியுடன் விரட்டியது.

இதனால் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க தினேஷ் ஆட்டோவை விட்டுவிட்டு இறங்கி ஓடிச்சென்று அங்குள்ள ஒரு மளிகை கடைக்குள் புகுந்துள்ளார். ஆனால் விரட்டிச் சென்ற கும்பலில் 2 பேர், கடைக்குள் புகுந்து தினேஷை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை உரிமையாளர், கடை ஷட்டரை வெளிப்புறமாக பூட்டிவிட்டு கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து ஷட்டரை திறந்து பார்த்தபோது உள்ளே தினேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சடலம் அருகிலேயே குற்றவாளிகள் 2 பேர், கொலை வெறியுடன் நின்றிருந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அறிந்ததும் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் சிபிசக்ரவர்த்தி, துணை கமிஷனர்கள் மகேந்திரன், தீபக்சுவாஜ், உதவி கமிஷனர் ரூபன், சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், தினேஷை கொலை செய்தவர்கள் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஊசி உதயகுமார் (22), ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சிசி மணி என்ற மணிவண்ணன் (28) என தெரிந்தது. வேளச்சேரியை சேர்ந்த ரவுடி குணாவும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராபினும் (36) நெருங்கிய கூட்டாளிகள். இவர்கள் 2 பேரும் வழிப்பறி, அடி, தடி கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்றுள்ளனர்.

குணா, ராபினிடம் இருந்து விலகிய குணா அவனது எதிர் தரப்பை சேர்ந்த நோண்டி விக்கி (35), பிரபல ரவுடி நாகூர்மீரானிடம் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். கோவை சிறையில் இருக்கும் ராபின், ஆலந்தூர் நீதிமன்றம் வரும்போதெல்லாம் தனது ஆட்கள் மூலம் வழக்கு செலவுக்கு பணம் கேட்டு குணாவை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் குணா பணம் தர மறுத்துள்ளார். இந்த நிலையில் ராபினின் கூட்டாளிகளான ஊசி உதயகுமார், மணிவண்ணன் ஆகியோர் நேற்றுமுன்தினம் புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். உதயகுமார், மணிவண்ணன் ஆகியோரிடம் செல்போன் இல்லாததால் இவர்களுடைய கூட்டாளி ஒருவரை குணா செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர், ‘’ராபினை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறான். அவனுக்கு சுகர் அதிகமாகிவிட்டது என கேள்விப்பட்டேன். சிறை சாப்பாடு அவனுக்கு ஒத்துக்கொள்ளாமல் அவனே செத்து விடுவான் என நினைக்கிறேன்.மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் அவனை சிறையில் ஆட்களை வைத்து கதையை முடித்து விடுவேன். பிணையில் ராபின் வெளிவந்தாலும் அவன் கதையை முடித்து விடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த வெறி தினேஷ் குணாவிடம் இருந்து செல்போனை பிடுங்கி, ‘’எங்க வாத்தியார்கிட்டயே வச்சுக்காத தொலைச்சிடுவேன்’’ என்று உதயகுமார் மணிவண்ணன் இருவரையும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து உதயகுமார், மணிவண்ணன் ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து குணா, தினேஷ் இருவரையும் தேடியுள்ளனர். இந்த நிலையில்தான், வெறி தினேஷ் கிண்டியில் இருப்பதை அறிந்துகொண்ட அவர்கள் வந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் வடிவேலு சினிமா பாணியில் போனில் முகவரி கொடுத்ததால் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

The post வடிவேலு சினிமா பாணியில் போனில் முகவரி கொடுத்த கிண்டி ஆட்டோ டிரைவர் கொடூர கொலை: மளிகை கடையில் வைத்து சரமாரி வெட்டி சாய்த்தனர் appeared first on Dinakaran.

Tags : Kindi ,Vadivelu ,Alandur ,Guindi ,
× RELATED கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல