×

காவல்துறை கவாத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் சாதி சண்டை, மதக்கலவரம் இல்லை: மிகுந்த மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் சாதி சண்டைகள், மதக்கலரம் இல்லை, ரவுடிகள் தொல்லை இல்லை என்றும், மிகுந்த மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன் என்றும் நேற்று ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் தெரிவித்தார். டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை பிரிவு உபச்சார விழா நடந்தது.

இந்த விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங், தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஸ் குமார், தலையிட ஏடிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராமன், தெற்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், சென்னை மாநகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, லோகநாதன், கபில் குமார் சரட்கர் மற்றும் டிஐஜிக்கள், எஸ்பிக்கள் என காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரிவு உபாச்சார விழாவிற்கு வருகை தந்த ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை பூங்கொத்து கொடுத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் வரவேற்றார். அப்போது காவல் இசைக்குழுவின் பேன்டு வாத்தியங்களுடன் அவர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். பிறகு, காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கவாத்து அணி வகுப்பு மரியாதையை டிஜிபி சைலேந்திரபாபு ஏற்றுக்கொண்டார். பின்னர் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நினைவு பரிசை புதிய டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கி முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அவரது மனைவி சோபியாவை கவுரவித்தார்.

அதைதொடர்ந்து சைலேந்திரபாபு பேசியதாவது: மிகுந்த மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன். கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி கலவரங்கள், மதக்கலவரங்கள் இல்லை, போலீஸ் துப்பாக்கிசூடு இல்லை, ரயில் கொள்ளைகள் இல்லை, பிற மாநில துப்பாக்கி கொள்ளையர்கள் அட்டகாசம் இல்லை, தீவிரவாத தாக்குதல் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்படவில்லை, மதத்தலைவர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யும் நிகழ்வுகள் இல்லை. தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஜல்லிக்கட்டு, மதுரை சித்திரை திருவிழா, விநாயகர் சதுர்த்தி, தேவர் குருபூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் போன்றவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டன.

உள்ளாட்சி தேர்தல் எந்த இடையூறுமின்றி அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. 3047 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அமைக்கப்பட்டனர். ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ மூலம் 20,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28,594 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.67 கோடி மதிப்பிலான 54,352 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை படைத் தலைவராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* ரோப் புல்லிங் மூலம் சைலேந்திரபாபு காரை இழுத்து சென்ற அதிகாரிகள்
புதிய தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால் பதவியேற்ற பிறகு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தன்னுடன் பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி கூறி தனது மனைவியுடன் காரில் புறப்பட்டார். அப்போது காவல்துறை முறைப்படி முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அவரது மனைவியை காரில் அமர வைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் ஒன்று கூடி வடம் பிடித்து (ரோப் புல்லிங்) இழுத்தனர். அப்போது காவலர்கள் இயக்குநர் அலுவலகம் முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நுழைவாயில் வரை மலர்தூவி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

The post காவல்துறை கவாத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் சாதி சண்டை, மதக்கலவரம் இல்லை: மிகுந்த மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Former ,DGP ,Sailendrababu ,Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...