×

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறையின் இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர் ஜிவால் தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறையின் இயக்குநராக இருந்த சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து காவல்துறை புதிய இயக்குநராக சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவாலை தமிழக அரசு நியமனம் செய்தது. இதை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் 31வது இயக்குநராக சங்கர் ஜிவால் நேற்று சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, சங்கர் ஜிவால் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பிற்பகல் 2.05 மணிக்கு வந்தார். அவரை சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருண், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் போலீஸ் மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு புதிய காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பூங்கொத்து கொடுத்து இருக்கையில் அமரவைத்தார். அப்போது தமிழ்நாடு காவல்துறையில் அனைத்து பொறுப்புகளுக்கான கோப்புகளையும் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். பிறகு காவல்துறை கோப்புகளில் சங்கர் ஜிவால் கையெழுத்திட்டு சட்டம் -ஒழுங்கு டிஜிபி பணியை ஏற்றுக்கொண்டார்.

அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபி டேவிட்சன் ேதவாசீர்வாதம், சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமன், மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஐஜிக்கள் சுதாகர், கண்ணன், செந்தில்வேலன், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, கபில்குமார் சரத்கர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் புதிய டிஜிபிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:

ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மனிதநேயத்துடன் சேர்த்து காவல்துறை பணியை மேம்படுத்த முயற்சி செய்யப்படும். பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வரும் போது, அவர்களின் கோரிக்கைகளை முறையாக கையாள வேண்டும். அதற்காக எல்லா காவல் நிலையத்திலும் வரவேற்பு பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. அதை நாம் இன்னும் சிறந்த முறையில் விரிவுபடுத்தப் போகிறோம்.

காவலர்கள் நலம் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு என விடுமுறை, மருத்துவ வசதி மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை சிறப்பாக செய்ய திட்டமிட்டுள்ளது. சென்னையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டு வசதிகளை மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு வருவதற்கும் முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Shankar Jiwal ,DGB ,Chennai ,Tamil Nadu Police ,Tamil Nadu ,Sankar Jiwal ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...