×

சேலம் மாஜி விஐபியை வரவேற்க கட்சிக்காரர்கள் போர்வையில் வரும் நூறு பவுன்சர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பவுன்சர்களை கூட்டி வந்து கட்சிக்காரர்களாக காட்டி சேலம்காரரை ஏய்க்கிறாங்களாமே அடிப்பொடிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தலைவரான சேலத்துக்காரரின் சொந்த தொகுதியில் கட்சி கரைஞ்சிக்கிட்டு வருதாம். அவரது நெருங்கிய ஆதரவாளர்களான சித்தூர், தங்காயூர் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளின் தலைவர்கள் மாற்று கட்சிக்கு ஓடி வந்துட்டாங்களாம். இதனால ரொம்பவே ஷாக்கான சேலத்துக்காரர், சுற்றுப்பயணத்தை தொடங்கினாராம். இதற்காக ஒரு பிரமாண்ட கூட்டத்தை காட்டணுமுன்னு திட்டம் போட்டு, நூறுநாள் வேலை பார்க்கும் பெண்களை தலைக்கு முன்னூறு கேஷ், பொட்டல சாப்பாடு கொடுத்து அழைச்சிட்டு வரணுமுன்னு உத்தரவு போட்டாராம். அதன்படியே அவரது அடிப்பொடிகள் செஞ்சி நல்லபெயரை வாங்கிட்டாங்களாம். மேலும் சாரை சாரையாக கட்சியில் இணைஞ்சாங்கன்னும் சொல்லி ஆனந்தப் பட்டுக்கிட்டாராம். இது ஒருபுறமிருக்க சேலத்துக்காரரு சொந்த தொகுதிக்கு வாராருன்னு சொன்னா, அவருடன் நூறு பவுன்சர்களையும் வரவழைச்சிடுவாங்களாம். அவங்களுக்கு தினமும் 2 ஆயிரம் சேலரி கொடுத்திடுவாங்களாம். காரில் வரும் அவர்கள் பட்டாசு வெடிப்பதுடன், சேலத்துக்காரரின் பெயரை அழுத்தி சொல்வாங்களாம். அவர்களே வாழ்க கோஷமும் போடுவாங்களாம். இவ்வாறு கட்சிக்காரர்களை ஏமாற்றி வருவதாகவும், இது உண்மையான கட்சித்தொண்டர்களுக்கு பெருத்த அவமானமாக இருப்பதாகவும் அவரது எதிர்முகாமில் இருக்கும் குக்கர்காரங்க அடிச்சி சொல்றாங்க. அதுவே சின்னமம்மியை கட்சியில சேர்த்துக்கிட்டா வரவேற்பு சிறப்பாக இருக்குமேன்னும் சொல்லி ஆதங்கப்படுறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பழைய மாஜியின் பழைய உதவியாளர் இப்பவும் வேலையை காட்டுறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. மெடல் மாவட்டத்தில் இலைக்கட்சி ஆட்சிக்காலத்தில் முன்னாள் மாஜி பால்வளத்தின் சொந்த ஊரான மரியாதைக்கல் ஊரானது நகராட்சியாக இருந்தபோது, நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன. ஒப்பந்த பணிகள் அப்போது மாஜி பால்வளத்தின் பினாமிகள் பெயரில் டெண்டர் போட்டு தரமின்றி நடந்ததாம். இதுக்கு அங்க பணிபுரிந்த உதவி பொறியாளர், ஒரு உதவியாளர் காரணமாக இருந்திருக்காங்க. இப்போது மரியாதைக்கல் நகராட்சியை தீப்பெட்டி நகரத்து மாநகராட்சியோட இணைச்சுட்டாங்க. ஆனாலும் அங்கு பணி புரிந்த அந்த உதவியாளர், இப்பவும் அதிகாரி ஒருவரின் துணையோடு பவர்புல்லா இருந்துட்டு வர்றாராம். மரியாதைக்கல் பகுதியில் நடக்குற பணிகளுக்கு யாருக்கு டெண்டர் கொடுக்கணும்னு இப்பவும் அவருதான் முடிவு செய்றாராம். அப்பகுதியில் உள்ள ஒரு ஊரணியில ரூ.7 லட்சம் மதிப்பில் கம்பி வேலி அமைக்கும் பணிக்கு அந்த உதவியாளரோட பினாமிக்கு பதிலா வேறு ஒரு கான்ட்ராக்டருக்கு வேலை கொடுத்துருக்காங்க. பணிய முடிச்சுட்டு மரியாதைக்கல் அலுவலகத்துக்கு அந்த கான்ட்ராக்டர் செக் வாங்க போயிருக்காரு. அந்த வில்லங்கமான உதவியாளரோ, செக் தராமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளார். இலைக்கட்சி ஆட்சியில நல்லா கல்லா கட்டின அந்த பவர்புல்லான உதவியாளர், பக்கத்து மாவட்டத்துல பல லட்சம் மதிப்பில் பண்ணை வீடு எல்லாம் கட்டியிருக்காராம்.. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார்கள் பறந்தவண்ணம் உள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடக் கூடாது என்று கோயிலுக்கு பூஜையெல்லாம் செய்ததா கேள்விப்பட்டேன்.. என்னா விஷயம்..’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நடைபெற்ற தோள்சீலை போராட்ட மாநாட்டை வேறு அமைப்பு நடத்தினாலும், முதல்வர் கலந்து கொண்டதால் பல ஆயிரம் மக்கள் கூட்டினர். இதனால், பா.ஜனதா கட்சியினருக்கும் அதே திடலில் அதிகமாக கூட்டம் கூட்டி காண்பிக்க கட்சி மேலிடம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பா.ஜனதா சார்பில் அண்ணாமலை கலந்து கொள்ளும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் பெரும் கூட்டத்தை திரட்ட திட்டமிட்டு, மேடை அமைக்கப்பட்ட நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அண்ணாமலையிடம் பெயர் வாங்க ஒவ்வொரு கோஷ்டியும் பிளக்ஸ் என பல விதங்களில் பணத்தை லட்சம் லட்சமாக கொட்டி செலவு செய்திருந்தனர். இந்த செலவு வீணாய் போய் விட்டதே என கட்சி நிர்வாகிகள் புலம்பிய நிலையில், ஒத்திவைக்கப்பட்ட குமரி சங்கம நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த முறையும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட எந்த காரணத்தினாலும், நிகழ்ச்சி தடைபட்டு விடக் கூடாது என நினைத்த பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணியை தொடங்கும் முன்னர் நாகராஜா கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜை நடத்தினர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓய்வுபெற்ற ஆளுக்கு இன்னும் ஆசை போகலை போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஐந்து எழுத்து அதிகாரி, தமிழக அரசின் பத்திரப்பதிவு துறையில் படுவேகமாக கோலோச்சி வந்தார். இவரது மொத்த சர்வீஸ், 32 ஆண்டு காலம். இதில், கோவை மண்டலத்தில் மட்டுமே 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1991-ம் ஆண்டு பதிவுத்துறையில் சார்-பதிவாளராக பணியில் சேர்ந்த இவர், பல பதவிகளை கடந்து, பதிவுத்துறை கூடுதல் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றார். 32 ஆண்டு கால சர்வீசில், இவர் வாங்கி குவிக்காத சொத்துக்களே இல்லை என்கிறார்கள். உதாரணமாக, வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியில் பினாமி பெயரில் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி குவித்துள்ளார். கோவை பீளமேட்டில் அப்பார்ட்மென்ட்கள் வாங்கியுள்ளார். சிறுவாணி அருகே 50 ஏக்கர் தோட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் 300 ஏக்கர் நிலம், வடவள்ளியில் 100 வீடுகள் ெகாண்ட அப்பார்ட்மென்ட் மற்றும் வணிக வளாகம் என கணக்கில் அடங்காமல் சொத்து குவித்துள்ளார். கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, அத்துறை அமைச்சரை கையில் போட்டுக்கொண்டு, தனக்கு சாதகமான அத்தனை காரியங்களையும் செய்து முடித்துள்ளார். தற்போது ஓய்வுகாலத்தில், இவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால், கோவை மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு சார்-பதிவாளரையும் தொடர்புகொண்டு, ‘‘உங்களுக்கு வேண்டிய இடத்தில் டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்கிறேன்… கொஞ்சம் கவனியுங்கள்…’’ என டயலாக் தட்டிவிட்டு, காசு குவிக்கிறாராம். அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இவரது செயல்பாடுகள் இருப்பதால், மேல்மட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வலையில் சிக்கியுள்ளார். மிக விரைவில் சிக்குவார் என்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம் மாஜி விஐபியை வரவேற்க கட்சிக்காரர்கள் போர்வையில் வரும் நூறு பவுன்சர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem Maji ,Salemgarh ,Peter ,Saletakkara ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது