×

சைவ ஓட்டல் நடத்தும்பட்டதாரி தம்பதி

இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள், ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் விவசாயத்தில் இறங்கும் காலம் இது. ஆனால் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி தம்பதிகளான சீனிவாசனும், மாலதியும் சைவ ஹோட்டல் துவங்கி இருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் சேவை அடிப்படையில் உணவு சமைத்த இவர்களுக்கு, சமையல் இன்று ஒரு தொழிலாக மாறியிருக்கிறது. ஆனால் அதிலும் பாரம்பரியம், ஆரோக்கியம் என நல்ல விசயங்களைக் கடைபிடிக்கிறார்கள். மடிப்பாக்கம் லேக்வியூ மெயின்ரோட்டில் அமைந்துள்ள இவர்களது அக்சயபாத்திரம் என்ற பெயரிலான உணவகத்தில் மாலதியை சந்தித்தோம்…“ நான் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். என் கணவர் சீனிவாசன், மெக்கானிக்கல் என்ஜினியராக பணி புரிந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் எங்கள் ஏரியாவில் வசித்து வரும் முதியவர்கள் சிலர் சரியான உணவு கிடைக்காமல் தவிப்பதைப் பார்த்தோம். அது எங்கள் மனதை ஏதோ செய்ய, அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், உணவுகளை தயாரித்து பார்சல் செய்து தேவைப்படுவோருக்கு இலவசமாக கொடுக்கத் தொடங்கினோம்.

அதுபோன்று, எங்கள் வீட்டின் அருகில் இருந்த முதியோர் இல்லத்துக்கும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவந்தோம். அதேசமயம், முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர்களுக்கு ஒரே உணவாக இல்லாமல், யாருக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு, அவரவருக்கு தகுந்த மாதிரியான உணவுகளை தயாரித்துக் கொடுத்தோம்.இந்நிலையில், லாக்டவுன் முடிந்ததும், அந்த ஹோமில் இருந்த பலரும் மீண்டும் தங்களுக்கு உணவு சமைத்து தரும்படி கேட்டனர். ஏனென்றால், எவ்வளவுதான் பணம் செலவழித்தாலும், உடல்நலத்தை கெடுக்காத நல்ல தரமான உணவு கிடைப்பதில்லை என்று வருந்தினர். பல மாதங்களாக நாங்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததால், சமையலும் எங்களுக்கு ஓரளவு அத்துப்படியாகி இருந்தது. எனவே, எனது கணவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர உணவுத் தொழிலில் இறங்கினார். எனக்கும் அந்தசமயம் வீட்டில் இருந்தபடியே வேலை (ஒர்க் பிரம் ஹோம்) செய்ய சொல்லியிருந்ததால், இருவருமாக சேர்ந்து உணவகத்தை நடத்தத் தொடங்கினோம். உணவகம் தொடங்க வேண்டும் என்று முடிவானதும், உணவு தரமானதாக மட்டுமில்லாமல், பாரம்பரிய உணவாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஏனென்றால், இன்றைய சூழலில், சைனீஸ், வெஸ்டர்ன் என உணவுகளைத் தேடி மக்களின் கவனம் திரும்பியதால், நமது பாரம்பரிய உணவுகள் பலருக்கு மறந்தேபோச்சு. உதாரணமாக, அந்தக் காலத்தில் அரிசியை உடைத்து எடுக்கும்போது, கிடைக்கும் குருணை அரிசியைக் கூட வீணாக்காமல், உப்புமா செய்துவிடுவார்கள். அதுபோன்று, மோர்க்களி, புளிப்பொங்கல் போன்றவை எல்லாம் நிறைய பேருக்கு இருப்பது கூட தெரியவில்லை. இதனால், பாரம்பரிய உணவுகளை எங்கள் மெனுவாக தேர்வு செய்தோம். இதற்காக, எங்களது சொந்த ஊரான ரங்கத்துக்குச் சென்று, 88 வயதிலும் அருமையாக சமைத்துக் கொண்டிருக்கும் எனது பாட்டியிடம் பாரம்பரிய உணவுகளை எல்லாம் எப்படி சமைக்க வேண்டும் என்பதை முறையாக கற்றுக்கொண்டு வந்தோம். பின்னர், தினம் ஒரு டிஷ் என்ற அடிப்படையில் வாரத்தின் ஏழு நாள்களுக்கும் ஏழு விதமான உணவுப் பட்டியலை தயார் செய்தோம். அதாவது, தினசரி, இட்லி மற்றும் தோசை இருக்கும். ஆனால், தோசையில் தக்காளி தோசை, பூண்டு தோசை, பச்சைப்பயறு தோசை என பல வெரைட்டி இருக்கும். அதுபோன்று, கறிவேப்பிலை தோசை, முருங்கைக்கீரை தோசை, பசலைக்கீரை தோசை, வல்லாரை கீரை தோசை, முடக்கத்தான் தோசை என தினம் ஒருவகையான கீரை தோசை கட்டாயமாக கொடுக்கிறோம்.

இதுதவிர, எங்கள் சிக்னேச்சர் டிஷ் என்றால், சனிக்கிழமைகளில் மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து, சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்த இட்லிமாவில் செய்யும் காஞ்சிபுரம் இட்லியாகும். இந்த இட்லி, வேக குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எடுத்துக் கொள்ளும். ஆனால், அதன் சுவையும், மணமும் மிக பிரமாதமாக இருக்கும். உடலுக்கும் நன்மை செய்யக்கூடியதாகும். வெள்ளிக்கிழமைகளில் ஏதாவதொரு சிறுதானியத்தில் பொங்கல் மற்றும் அக்காரவடிசல் செய்வோம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த அக்காரவடிசலுக்காகவே தனி வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.ஆரம்பத்தில் எனக்கு ஒர்க் ப்ரம் ஹோம் இருந்ததால், மதியம், இரவு என இரண்டு வேளை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தோம். தற்போது, எனக்கு நிறுவனம் தொடங்கியதால், இரவு டிபன் மட்டுமே வழங்கி வருகிறோம். தற்போது, பலரும் காலை உணவும் வழங்கும்படி கேட்கிறார்கள். எனவே, விரைவில் காலை உணவு வழங்குவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

தினசரி சுமார் 100- 150 பேர் வரை சாப்பிடுகிறார்கள். அதுவே, வார இறுதி நாட்களில் 200-250 பேர் வரை சாப்பிட வருகிறார்கள். ஆரம்பத்தில், கையேந்திபவனாக இருந்த எங்களது கடையை தற்போது மக்கள் வந்து அமர்ந்து சாப்பிடும் சிறிய உணவகமாக மாற்றி இருக்கிறோம். எங்களுக்கு உணவகத் தொழில் முற்றிலும் புதிது என்றாலும், சொந்த தொழில் புதிது அல்ல. எனது தந்தை, அவரது தந்தை இருவருமே பல ஆண்டுகளாக சொந்த தொழில் செய்துவரும் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களது ஆலோசனைகளையும் அவ்வப்போது வழங்கி வருகின்றனர். தற்போது, உணவகம் தொடங்கி மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். பெரியளவில் லாபம் இல்லை என்றாலும், இதுவரை, நஷ்டம் ஏற்படவில்லை. அதுவே, எங்களைத் தொடர்ந்து உழைக்கத் தூண்டுகிறது. மேலும், எங்களது உணவை சாப்பிட்டுவிட்டு, மனதார வாழ்த்தும் மக்களின் அந்த வாழ்த்துகள் எங்கள் தலைமுறைக்கே சேரும் என்று நம்புகிறோம்’’ என்கிறார்.

– தேவி குமரேசன்

The post சைவ ஓட்டல் நடத்தும்பட்டதாரி தம்பதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hotel ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...