சென்னை : செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த 14ம்தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய பிறகே அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது தெரிய வந்தது. பிறகு செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து, செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 16ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று, தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளதாக கவர்னர் மாளிகை அறிவித்தது. ஆளுநரின் இந்த உத்தரவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆளுநரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பியதை அடுத்து சில மணி நேரங்களிலேயே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசியதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…கடும் எதிர்ப்புகளை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பல்டி!! appeared first on Dinakaran.