×

கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு சளி ஊசிக்கு பதில் சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்

 

கடலூர், ஜூன் 29: கடலூர் அருகே உள்ள கோதண்டராமாபுரத்தை சேர்ந்த கருணாகரன் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மூத்த மகளான சாதனாவை (13) கடந்த 27ம் தேதி சளி மற்றும் காய்ச்சலுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு சாதனாவை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். மேலும் ஊசி போடவும் சீட்டு கொடுத்தார். பின்னர் அந்த சீட்டை செவிலியரிடம் கொடுத்தேன். அவர்கள் சாதனாவுக்கு இரண்டு ஊசிகள் போட்டனர். அப்போது நான் அவர்களிடம் ஏன் இரண்டு ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு செவிலியர்கள் நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சளிக்கு ஏன் நாய்க்கடி ஊசி போட்டீர்கள் என்று கேட்டேன். ஆனால் செவிலியர் அதற்கு மழுப்பலாக பதில் அளித்தார். வீட்டிற்கு சென்ற சாதனாவிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்துள்ளேன். தற்போது என் மகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், அப்போது பணியில் இருந்த மருத்துவர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு சளி ஊசிக்கு பதில் சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Govt Hospital ,Cuddalore ,Karunakaran ,Kothandaramapuram ,Cuddalore Pudunagar police station ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்