×

உதயநிதி நடித்து இன்று வெளியாகவுள்ள மாமன்னன் படத்தை வெளியிட தடைகோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தின் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. 80% படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. 20% படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை ரூ.13 கோடி செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இதனால், மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஷ்வரன், உதயநிதி ஏஞ்சல் படத்தை முடித்துக்கொடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

ரெட்ஜெயினட் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிட்டெட் நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும் தான். அதுவும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திடம் தான். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்ட்னர் இல்லை என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து அந்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தார். ஏஞ்சல் திரைப்படத்தில் நடித்து தருவது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் என்றார்.

The post உதயநிதி நடித்து இன்று வெளியாகவுள்ள மாமன்னன் படத்தை வெளியிட தடைகோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Chennai ,Chennai High Court ,OSD Films ,
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று...