×

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீட்டுக்கு போலி ஆணை வழங்கி ஒன்றிய அமைச்சர் பூமி பூஜை: புதுகை கலெக்டரிடம் ஊராட்சி உறுப்பினர் புகார்

புதுக்கோட்டை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஏற்கனவே ஆணை வழங்கி 2 முறை நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு ஒன்றிய அமைச்சரை வைத்து புதிதாக ஆணை வழங்கி பூமி பூஜை போட்டுள்ளதாக பாஜவினர் மீது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சேதுராப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒச்சம்பட்டியில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதில் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் மற்றும் பாஜவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அது போலி பந்தாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி ஊராட்சி 1வது வார்டு உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருமான முருகானந்தம் கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2021-ல் 5 பேருக்கும், 2022-ல் ஒருவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் வீடுகளை கட்டி முடித்து விட்டனர். 3 பேர் பணியை தொடங்கவில்லை. 6வதாக முத்துக்கருப்பன் மனைவி கருப்பாயி என்பவரின் பெயரில் வழங்கப்பட்ட பணி ஆணையின்படி வேலை நடைபெற்று வருகிறது. அவருக்கு இரு முறை அரசு நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக, உள்நோக்கத்துடன் அவரது வீட்டுக்கு பாஜவினர் பூமி பூஜை போட்டுள்ளனர். போலியாக வீடு கட்டுவதற்கான ஆணை ஒன்றையும் அந்நிகழ்ச்சியின்போது பயனாளி கருப்பாயியிடம் வழங்கியுள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ, ஊராட்சி மன்றத்துக்கோ எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இத்திட்டத்தை நிறைவேற்றும் மாநில அரசை அவமானப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீட்டுக்கு போலி ஆணை வழங்கி ஒன்றிய அமைச்சர் பூமி பூஜை: புதுகை கலெக்டரிடம் ஊராட்சி உறுப்பினர் புகார் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Bhumi Pooja ,Prime ,Panchayat ,Pudukhai Collector ,Pudukottai ,Bhumi Pujai ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...