×

முத்துக்கள் முப்பது-சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி – 28.6.2023

எஸ்.கோகுலாச்சாரி

1. ஸ்ரீசுதர்சன ஜெயந்தி

ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத் தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீசுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும். இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சு என்றால் நன்மை, புனிதம் என்று பொருள். தரிசித்தால் நன்மையும் செல்வமும் தரக் கூடியவர் என்பதால் இவருடைய திருநாமமே சு+தர்சனம் = சுதர்சனம் ஆயிற்று. ஆயுதங்களில் திருக்கையில் இருந்து நீங்கி, எதிரியை வீழ்த்திவிட்டு திரும்பவும்பெருமாள் திருக்கரம் வந்து சேரக்கூடிய ஒரே ஆயுதம் இந்த சக்கரமே. இந்த ஆண்டு சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பெருமாளுக்குரிய புதன்கிழமை வருகிறது. நரசிம்மர் மற்றும் சக்கரத்திற்குரிய செவ்வாய் நட்சத்திரமான சித்திரையிலும், நரசிம்மருக்குரிய ஸ்வாதியிலும் வருகிறது.

2. ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர்

பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர் ஸ்ரீசக்கரம் என்னும் ஸ்ரீசுதர்ஸனர். எம்பெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத்திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீசுதர்ஸனர், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறார். அவர் அருளால் சித்திக்காதது எதுவுமில்லை. பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை, தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். ‘‘ஆழியான்’’ என்று பெருமாளுக்குப் பெயர்.

சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6,12,24,48 என்று வலம் வருதல் நலம். சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு.

3. ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி

சில கோயில்களில் ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில் ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருமோகூரில் எழுந்தருளியுள்ள காள மேகப் பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரசில் அக்னிக்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள்-பதினாறு திவ்யாயுதங்களுடன் ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் காட்சி தருகிறார்.

4. திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் தம்முடைய முதல் பதிகத்திலேயே, ‘‘ஆழியான் அருளால், எனக்கு நாராயண நாமம் கிடைத்தது. அந்த நாராயண நாமத்தால் மற்ற எல்லாம் கிடைத்தன’’ என்று பாடுகின்றார்.

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.

5. சுதர்சன ஆழ்வார்

எம்பெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை ஆழ்வார்கள் என்று அழைப்போம். சுதர்சனர் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அகலாத பக்தி கொண்டு ஆழ்ந்து இருப்பதால் இவரை சுதர்சன ஆழ்வார் என்று அழைப்பார்கள். சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன. இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீமகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீசுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர். எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப் பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணுபுராணம்.

6. வெற்றி வீரர்

ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையவர். வெற்றி வீரர். பெருமாள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பவர். அடியார்களை அனவரதமும் ரசிப்பவர். சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்ஸனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றும் போற்றுவர். சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு ‘‘ஹேதிராஜன்” என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

7. பெரியாழ்வார்

ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார். திருமழிசையாழ்வார் சங்கு சக்கரத்தோடு பெருமாள் நிற்கக்கூடிய அழகை, ‘‘வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்” என்ற பாடலில் குறிப்பிடுகின்றார். தமது திருச்சந்த விருத்தத்திலும் நான்முகன் திருவந்தாதியிலும் சக்கரத்தாழ்வாரைப் போற்றுகின்றார்.

தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெருமை, – ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்.

“அருள் முடிவது ஆழியான் பால்” என்று பாடி, அப்படிப்பட்ட “ஆழியான் பெருமையை யார் அறிவார்?” என்றும் போற்றுகின்றார்ஆழி என்கின்ற சொல்லுக்கு சக்கரம் என்று ஒரு பொருள். கடல் என்று ஒரு பொருள். இரண்டுமே எம்பெருமானுக்கு சேர்த்தியாக இருப்பது. பெரியாழ்வார் ‘‘வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’’ என்று இவரை வாழ்த்துகிறார். மேலும் “என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு” என்று குறிப்பிடுகிறார். ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில், “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’’ என்றே பெருமாளை பாடுகிறார். நம்மாழ்வார் ‘‘சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார். ‘‘சுதர்ஸனாஷ்டகம்’’ என்ற ஸ்தோத்ர மாலையிலும் இவரை போற்றியுள்ளார்!

8. ஒவ்வொரு அவதாரத்திலும்…

எம்பெருமானுடைய ஒவ்வொரு அவதாரத்திலும் ஏதோ ஒருவகையில் இவரும் அவதாரம் செய்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எம்பெருமானுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுபவர். மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும். ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால். அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை. சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது. மச்சாவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாக இருந்தவர். கூர்மாவதாரத்தில் மந்திர மலையை சுதர்ஸனம் கொண்டே பெயர்த்தெடுத்தனர்; எம்பெருமானுடைய வராக அவதாரத்தில் அவருடைய கோரைப்பற்களாக அவதரித்தவர்.

9. இரணியனை சம்ஹாரம் செய்தவர்

நரசிம்ம அவதாரத்தில் பகவான் இரு கைகளில் கூர்மையான நகங்களாக இருந்து இரணியனை சம்ஹாரம் செய்தவர். வாமனாவதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாக இருந்தவர். இதை பெரியாழ்வார் இப்படி உறுதி செய்கிறார்.

‘‘மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்,
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய,
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக்கையனே என்று பாடுகிறார்

பரசுராம அவதாரத்தில் கூர் மழுவாக இருந்தவர். ராமாவதாரத்தில் ஜுவாலா மூர்த்தியாகி பாணங்களில் புகுந்து எதிரிகளை சுட்டெரித்தவர். துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து, விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி, துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே.

10. சிசுபாலன் வதம்

பூரணமான அவதாரமான கண்ணன் அவதாரத்தில் நினைத்தபோது வந்து நின்றவர். பிரத்யட்சமாகவே காட்சி தந்தவர். எட்டாம் நாள் போரில் கண்ணன் வகுத்தும் 13-ம் நாள் போரில் துரோணர் வகுத்ததும் சகட சக்கர வியூகங்களே. மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் சக்கரத்தால்தான் நடந்தது. பீஷ்மரின் வேண்டுகோளுக்கிணங்க சக்கரக்கையனாக யுத்தகளத்தில் காட்சி தந்தார். அதைப்போலவே ஜெயத்ரதனை அழித்திட, சக்கரத்தால் சூரியனை மறைத்தார். இப்படி கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யட்சமாக எம்பெருமானோடு இருந்தவர் சக்கரத்தாழ்வார்.

11. கஜேந்திரனைக் காக்க

ஆதிமூலமே என்றழைத்த கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் திருக்கரத்திலிருந்து சீறிக் கிளம்பி காத்தது சக்கரத்தாழ்வார்தான்!

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.

மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே, புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் ஒரு நீர் நிலையில் இறங்கியது கஜேந்திரன் என்கிற யானை. தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக முதலையானது அவ்யானையின் காலைத் கௌவிக்கொண்டது. அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி கருடனை வாகனமாகக் கொண்டு, பொய்கைக் கரையிலே எழுந்தருளி, அங்கே சக்கரத்தை முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

12. அம்பரீஷனை

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விஷ்ணு பக்தனான அம்பரீஷனை காப்பாற்றி துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சுதர்சன சக்கரம்தான்! `நாராயணீயம்’ முப்பத்து மூன்றாவது தசகம் அ அம்பரீஷ மன்னரின் வரலாற்றைக் கூறுகிறது. ஏஅம்பரீஷன். நாராயணனின் பரம பக்தனாகவும், சிறந்த அரசனாகவும் இருந்தான். ஏகாதசி விரதத்தைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து வந்தான்.

ஒருமுறை, ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள் துவாதசியன்று, துர்வாச முனிவர் அம்பரீஷனைச் சந்திக்க வந்தார். துர்வாசரை தன்னோடு உணவு உண்ண அழைத்தான் அம்பரீஷன். நீராடி விட்டு வருவதாகச் சென்றார் துர்வாசர். வெகுநேரம் அவர் திரும்பவில்லை. உரிய நேரத்தில் விரதத்தை முடிக்காவிட்டால், தெய்வக் குற்றம் ஆகிவிடுமே என்று அம்பரீஷன் தவித்தான். மற்ற முனிவர்கள் அறிவுரைப்படி சிறிது துளசி தீர்த்தத்தை பருகி துர்வாசருக்காகக் காத்திருந்தான்.

அந்த வேளையில் வந்த துர்வாசர், தான் வரும் வரை பொறுக்காமல் விரதத்தை முடித்துக்கொண்ட அம்பரீஷனைப் பலவாறு ஏசினார். கோபத்தின் தலையில் ஏற தன்னிலை மறந்து, தன்னுடைய தலைமுடியில் ஒன்றை எடுத்து அம்பரீஷனை நோக்கி வீசி எறிந்தார் துர்வாசர். அந்த முடி கொடிய பூதமாக மாறி, அம்பரீஷனை கொல்லப் பாய்ந்து வந்தது. தன்னுடைய பக்தனைக் கொல்லவரும் சக்திவாய்ந்த பூதத்தை அழிக்க, தன்னுடைய சுதர்சன சக்கரத்தை ஏவினார் ஸ்ரீமந் நாராயணர்.

ஸ்ரீசக்கரம் பூதத்தையும் கொன்று துர்வாசரையும் துரத்தியது. இதனால் பயந்து போன அவர் வைகுண்டத்தை அடைந்து, திருமாலின் பாதத்தைப் பற்றினார். ‘போட்ட இடத்தில தேடு. அம்பரீஷன் மன்னித்தால் மட்டுமே ஸ்ரீசக்கரம் சாந்தியாகும்’ என்று திருமால் கூறினார். அதன்படி அம்பரீஷனை சரண் அடைந்தார் துர்வாசர்.

13. எந்த தீயசக்தியையும் அழிக்கவல்லவர்

ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் சேவித்து சந்நதி வலம் செய்தால், நமக்கு நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலட்சுமிகளையும், எட்டு திக்குகளையும் வணங்கிய பலனுடன், பதினாறு வகையான பேரருளும் கிட்டும். உலகில் உள்ள எந்த தீயசக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லவர் இந்த மஹாசுதர்ஸனர்! மந்திர, தந்திர, யந்திர, அஸ்திர, சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து நல்லோரை துயரிலிருந்து காக்கவல்லவர் மஹாசுதர்ஸனர். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

14. நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால், நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் அவதார தினத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் தரிசிக்கும் போது அவருடைய காயத்திரி மந்திரம் சொல்வது சிறப்பு.

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்

15. பல்வேறு தத்துவங்களை எடுத்துக்காட்டுகின்றது

இந்தச் சக்கரம் என்பது பல்வேறு தத்துவங்களை எடுத்துக்காட்டுகின்றது. யோக சாஸ்திரத்தில் நம் உடம்பில் ஆதாரமாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள். இதிலே ஆன்ம உணர்வு பெற்று எம்பெருமானை சாட்சாத்காரம் செய்ய வேண்டும் என்று சொன்னால், இந்த சகஸ்ராரம் என்கின்ற சக்கரத்திற்குச் செல்ல வேண்டும். சக்கரம் என்பது ஒரு புள்ளியில் தொடங்கி அதே புள்ளியில் முடிவது. சக்கரத்தைப் பொருத்தவரை அதனுடைய மையத்திலிருந்து சக்கரத்தின் தூரம் (ஆரம்) எல்லா இடங்களிலும் ஒரே தூரத்திலே இருக்கும். தொடங்கிய புள்ளியே முடிவாகும். முடிவான புள்ளியே தொடக்கமாகவும் இருப்பது சக்கரத்தின் தத்துவம். ஆனால், எங்கே தொடக்கம் எங்கே முடிவு என்பதுதான் யாருக்கும் தெரியாது.

இது இறை தத்துவத்தைக் குறிக்கிறது. இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். வாழ்க்கைப் பயணத்தின் ஒரே மாதிரி எதுவும் இருந்தது இல்லை. எந்த சரித்திரமும் ஒரு உச்சிக்குச் சென்று பிறகு வீழ்ச்சி அடைந்து விடும். எந்த வீழ்ச்சியும் அதுல இருந்து ஒரு உச்சிக்குச் சென்று விடும். சக்கரத்தின் புள்ளிக்கு கீழேதொட்டு மறுபடி சுழலும்போது அது உச்சிக்குச் சென்று மறுபடி இறங்கும். சகட யோகம் என்பார்கள். நிலையற்ற நிலை. அது தானே பெரும்பாலானவர்க்கு வாழ்க்கை. உச்சிக்குச் செல்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தால்தான் சக்கரம் சுழல்வது என்று பொருள்.

16. ஜோதிடத்தில் சுதர்சனர்

12 ராசிகள் இருக்கட்டும், கிழமைகள் இருக்கட்டும், ஒரு நாளின் நேரமாக இருக்கட்டும், எது முடியுமோ அங்கே இருந்துதான் தொடக்கம். அந்த நாளின் முடிவும் அடுத்த நாளின் தொடக்கமும் ஒரே புள்ளிதான். நம்முடைய உடம்பும் அப்படித்தான். ஒவ்வொரு நிமிடமும் செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன.

இவை இரண்டும் நடந்தால்தான் ஒரு மனிதன் உயிரோடு இருக்கின்றான்; இயங்குகின்றான் என்று பொருள். ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை அதைப்போலவே சக்கரம் வேகமாகச் சுழலுகின்ற பொழுது நீங்கள் சக்கரத்தை உற்று கவனித்தால் அதனுடைய சுழற்சி உங்கள் கண்களுக்கு தெரியாது அது நிற்பது போலவே தெரியும் அதைப் போலவே இந்த வாழ்க்கையும் வேகமாக சுழல்வதை நாம் உணர்வதில்லை.

17. சக்கரத்தின் தத்துவம்

ஜனனமும் மரணமும்கூட ஒரு சக்கரத்தைப் போலத்தான். ஆதிசங்கரர் புனரபி ஜனனம் புனரபி மரணம் பாடினார். ஒரு மனிதன் தூங்கப் போகும் போது அவன் விழித்து இருப்பதில்லை விழித்திருக்கும் பொழுது அவன் தூங்குவதில்லை ஆனால் இவை இரண்டுமே அவன் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கின்றனஅவன் கனவு காண்கின்ற பொழுது அது நினைவாக இருப்பதில்லை. அவன் நினைவில் இருக்கின்ற பொழுது அவன் கனவு காண்பதில்லை.

இவை இரண்டும் இரண்டு புள்ளிகள் என்று சொன்னாலும்கூட, ஒரு புள்ளியின் தொடக்கத்திலேயே அடுத்த புள்ளியும் பொருந்தி இருக்கிறது, அதுதான் சக்கரத்தின் தத்துவம். உறக்கத்தின் முடிவு விழிப்பு. விழிப்பின் முடிவு உறக்கம். திருவள்ளுவர் இதை மிக அழகாகச் சொல்லுவார். மரணம்கூட தத்துவத்திற்கு உட்பட்டதுதான். உறங்குவது போல சாக்காடு உறங்கி விழிப்பது போல பிறப்பு என்று மிக அழகாகச் சொல்லுவார். இந்த சக்கரத்தின் உடைய தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் வாழ்க்கை குழப்பமின்றி இனிதாக இருக்கும்.

18. சுழலச் செய்பவன் இறைவன்

எல்லாவற்றையும் இயக்குபவன் எம்பெருமான். சக்கரம் எப்பொழுதும் தானாகச் சுற்றுவதில்லை. அதைச் சுழலச் செய்வதற்கு ஒரு ஆற்றல், ஒரு மையப்புள்ளி, ஒரு அச்சாணி, வேண்டும். அதை சுழலச் செய்பவன்தான் இறைவன். அண்ட சராசரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கின்றன என்றுதான் விஞ்ஞானமும் சொல்லுகின்றது. இயக்கம் சுழற்சி இல்லாது போனால் அவை இல்லை என்று பொருள். நட்சத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பூமியை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். அண்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். எதை எடுத்துக் கொண்டாலும் அந்தரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கின்றன. காரணம் அதற்கென்று ஒரு விசையை எம்பெருமான் கொடுத்திருக்கின்றான்.

19. லயம், பிரளயம்

விசை குறைகின்றபோது மறுபடியும் அவன் விரலிலே வந்து அமர்கின்றது. மறுபடியும் இருக்கும் வரை அது காத்திருக்கிறது. இதைத்தான் நாம் தத்துவத்தில் லயம், பிரளயம் என்று சொல்லுகின்றோம். சக்கரத்தின் சுழற்சி வேகம் குறைகின்ற போது ஏதோ ஒரு புள்ளியில் – ஆதாரத்தில் போய்தான் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் மறுபடியும் அது இயங்க முடியும். சொல்ல முடியும். அந்த ஆதாரம்தான் ஸ்ரீமன் நாராயணன்.

20. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே

ஸ்ரீமன் நாராயணன் கையில் இருக்கக்கூடிய சக்கரம்தான் சக்கராயுதம். அவன் ஆட்டுவிக்கும் போது அது ஆடுகிறது. அது ஆடுகின்றபோது உலக உயிர்கள் ஆடுகின்றன; இயங்குகின்றன. இது சக்கரத்தின் இயக்கம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளுகின்ற பொழுது நம்முடைய ஆன்மா விழிப்பு அடைகிறது. எவன் சுழற்றினானோ அவனைக் கண்டு கொள்ளுகின்றது. அவன் யார் என்பதை உணர்ந்து விடுகின்றது. அந்த ஞானத்தை தருவதுதான் இந்த சக்கரம். தர்சனம். சுதர்சனம் என்றால் நல்ல ஞானம் அதாவது மெய்ஞ்ஞானம் அல்லவா?

21. ஆழியான் அவனே…

பெருமாளும் சக்கரமும் ஒன்றே. சக்ரத்தாழ்வார் நிற்கும் நிலைக்கு… ‘‘ப்ரத்யாலீடம்’’ என்று பெயர்!! இடது திருவடியை முன்புறம் நீட்டி, வலது திருவடியை பின்புறம் சுருக்கி வைத்துக் கொண்டு நிற்கும் நிலையைப் ஆர்த்திருக்கலாம். அதற்காகத்தான் பின்புறம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். சக்ரத்தாழ்வாரின் பின்புறத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி இருப்பார்.! முன்புறம் சக்கரத்தாழ்வார் மனித உருவத்தில் இருப்பர். பின்புறம் நரஸிம்ஹராக இருப்பர். முன்னே. நின்ற திருக்கோலம் அல்லது வேகமாக ஓடும் கோலத்தில் இருப்பார்.

பின்னே வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இருப்பார். இரண்டும் ஒரே தத்துவமே! நரசிம்மர் தமது நான்கு திருக்கரத்திலும்சக்ரமே வைத்திருப்பார்.! இருவரும் நமக்கு வேண்டு தல்களை நிறைவேற்றிக் கொடுப்பதிலும், துன்பங்களைப் போக்குவதிலும் ஒருவராக இருப்பார்கள். ஈருருவம் ஒன்றை இசைந்து என்று இந்தக் கோலத்தைச் சொல்லலாம்.

22. பிரளயத்தில் உலகைத் தாங்குகிறார்

ஸ்ரீமந் நாராயணனுக்கு இரண்டு சக்திகள் உண்டு. 1. இச்சா சக்தி (விருப்பம்) 2. க்ரியா சக்தி (செயல்) இச்சாசக்தியாகத் திகழ்பவள் அகலகில்லேன் என்று அவன் மார்பில் உறையும் ஸ்ரீமஹாலட்சுமி தாயார்! க்ரியா சக்தியாகத் திகழ்பவர்தான் ஸ்ரீசுதர்சனத்தாழ்வார்! எம்பெருமானின் நினைப்பதை நிறைவேற்றுபவர் சக்கரத்தாழ்வார்! சுதர்சனமே எல்லாவற்றிற்கும் ஆதாரம்! பிரளய காலத்தில் எம்பெருமான் இந்த லோகத்தை தன்னுள் ஒடுங்கச் செய்கிறான். இதனை லயம் என்பார்கள். உயிர்கள் அழியாத அந்த நிலையில் இந்த சித்தும் அசித்தும் மஹாராத்ரி என்ற ஸங்கல்பத்தால் தாங்கப்படுகிறது! மஹாராத்ரிதரம்தான் சுதர்சனர்.

23. சுதர்சன சக்கரத்தில் பல வகைகள்

சுதர்சன சக்கரத்தில் பல வகைகள் உண்டு. இரண்டு அரங்கள் கொண்டது. உஷஸ் சக்ரம்! மூன்று ஜ்ஞான ஸ்வரூபமாக இருப்பது உதய சக்ரம். ஆறு அரங்கள் கொண்டது விஷ்ணு சக்ரம்! எட்டு அரங்கள் கொண்டது நாராயண சக்ரம்! 32, 100 ஆரங்களும் உண்டு! இது தவிர ஐச்வர்ய சக்ரம், மஹாசக்ரம், மஹா சுதர்சன சக்ரம், ஸஹஸ்ரார சக்ரம் என்றெல்லாம் உண்டு! இந்த மஹா சுதர்சன சக்ரமானது, 12 அரங்களுடன் இருக்கும்! ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் இடமானது ஆயிரம் அரங்களுடன் கூடிய எம்பெருமானின் சங்கல்பமான ஸ்ரீ சுதர்சனத்தால் தாங்கப்படுகிறது!!!

24. சுதர்சன ஜ்வாலா

சக்கரம் கோடி சூரிய பிரகாசமாக ஜொலிக்கும். அதன் ஜிவாலைக்கு “சௌதர்ஸ்ரீநி ஜ்வாலா!” என்று பெயர்! சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும். பாதங்கள் சக்கரத்தைப்போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும். சுதர்சன ஜ்வாலையை த்யானித்தாலே நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும் இவரது அவயவங்கள்… அரம்! அக்ஷம்! நாபி! நேமி! சக்ரத்தாழ்வாரை ஆராதனை செய்யலாம். த்யானம் உய்யலாம். அவரை. ஹோமங்களினாலும், பீஜாக்ஷரங்களினாலும் துதிக்க நம் கொடுமையான துயர்கள் எல்லாம் போய்விடும்!

சக்ரத்தாழ்வாரின் கிரணங்கள் அஜ்ஞானமாகிய நம் பாவத்தைப் போக்கி விடும்! குடைகளில் கம்பிகள் போல சக்ரத்தில் இருக்கும் அறங்களை தியானிக்க நமக்கு வாக்கு பலிதமும் கவி கேள்விகளில் பாண்டித்துவமும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை அகற்றி, நம் மனதை நல்ல விஷயங்களில் ஈடுபடச் செய்வர்!அடியார்களோடு இருக்கும்போது….எம்பெருமானைத் தவிர வேறு சிந்தனைகள் நம்மை அண்டாது! அவரது ஆராதனைகள் நம் ஸம்ஸாரத்தில் உள்ள பாபங்களை எல்லாம் போக்கி விடும்! ஞானத்தைக் கொடுக்கும்! சுதர்சன வழிபாடு நல்ல வம்ச வ்ருத்தியையும், ஆயுள் ஆரோக்ய அஷ்ட ஐச்வர்யங்களையும், நோயற்ற வாழ்வையும் கொடுக்கும்!

25. சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்?

சுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இவரை சுதர்ஸன நரசிம்மம் என்பர். பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம். நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது என்பர். துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறப்பு. இதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

26. சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்

இந்தச் சுலோகத்தை தினசரி சொல்வதன் மூலம் சக்கரத்தாழ்வாரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம்
தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்.

27. சக்கரத்தாழ்வார் பற்றி ஜோதிட ரகசியங்கள்!

பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று வாழ்த்திப் பாடியுள்ளார். சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, `நானே உண்மையான வாசுதேவன்’ என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனை வென்றான்.

28. ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார்சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீரத்தினை குறிக்கும் செவ்வாயின் சக்கரத்தாழ்வாருக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.

செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீசக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார். ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

29. சுதர்சன உபாசனை

சுதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது. சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர். பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் சுதர்சனர்.

ஸ்வாமி தேசிகன் இயற்றியுள்ள சுதர்ஸனாஷ்டகம் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயரின் ஸுதர்ஸன சதக பாராயணமும் மிகவும் சக்தி வாய்ந்தது. இவற்றைப் பாராயணம் செய்தும், சுதர்சனர் சந்நதியில் நெய் விளக்கேற்றியும், பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம். சிவன் கோயில்களில் சிவாம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தாழ்வார் நமது சகல துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

30. நவக்கிரகங்களின் அனுக்கிரகம்

பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களுக்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துவிடும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை. செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால் சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம். ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும்.

தொகுப்பு: எஸ்.கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது-சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும் appeared first on Dinakaran.

Tags : Sudarashi ,Kunkum Anmigam Chakrathalwar Jayanti ,S.Kokulachari ,Srisudarsana ,Sudarazhi ,
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்