×

மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்கவுள்ள குழுவிற்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்கவுள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டீம் சீ சக்தி மாணவர் குழுவிற்கு உதவித்தொகையாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ரூ.15 லட்சம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.06.2023) தலைமைச் செயலகத்தில், மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே அணியும், இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் படகை உள்நாட்டு உந்துவிசை அமைப்புடன் உருவாக்கியுள்ள கோயம்புத்தூர், குமரகுரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டீம் சீ சக்தி (Team Sea Sakthi) என்ற மாணவர் குழுவினை ஊக்குவிக்கும் வகையில், இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான செலவுத் தொகையான 65 லட்சம் ரூபாயில் அரசின் சார்பில் உதவித் தொகையாக 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

இவ்வாண்டு ஜுலை மாதம் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆற்றல் படகு சவாலில் (International Energy Boat Challenge) கலந்து கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரகுரு பொறியியல் கல்லூரியின் 10 மாணாக்கர்களைக் கொண்ட டீம் சீ சக்தி (Team Sea Sakthi) குழு தேர்வான ஒரே இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பினை ஊக்குவித்து ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆற்றல் படகு சவாலில் கலந்து கொள்ள உதவித் தொகையாக 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பாக முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுவுக்கு வழங்கப்பட்டது.

இம்மாணவர் குழு நாட்டிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் படகை வடிவமைத்துள்ளனர். இக்குழு இத்தாலி, கனடா, துபாய், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த 17 அணிகளுடன் போட்டியிட உள்ளனர். இந்நிகழ்வில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண் ராய் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்கவுள்ள குழுவிற்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Monaco ,Energy Boat Challenge ,G.K. Stalin ,Chennai ,Team Sea Shakti ,Kumarakuru Education Institute ,Monaco Shakti Boat Challenge ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...