×

5.16 கோடியில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.6.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்தார். மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான முதன்மை விற்பனை வளாகமும், தேவையின் அடிப்படையில் கூடுதல் வணிக வளாகங்களும் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இவ்வணிக வளாகங்களுக்கு “பூமாலை வணிக வளாகம்” எனப் பெயர் சூட்டி திறந்து வைத்தார். அரியலூர், திருப்பூர் மற்றும் புதிய மாவட்டங்கள் நீங்கலாக 29 மாவட்டங்களில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருந்த இவ்வளாகங்களை சீரமைக்கும் பொருட்டு 29 வணிக வளாகங்களில் பெரம்பலூர் மாவட்ட வணிக வளாகம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாலும், நாகப்பட்டினம் மாவட்ட பூமாலை வணிக வளாகம் முழுவதுமாக சேதமடைந்ததாலும், முதற்கட்டமாக இவற்றில் 26 மாவட்ட அளவிலான பூமாலை வணிக வளாகங்களை புனரமைத்து, பழுதுநீக்கம் செய்து, ஒரே மாதிரியான வண்ணம் பூசிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, 26 மாவட்ட பூமாலை வணிக வளாகங்கள் 5 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், கிராமப்புறங்களில் வாழும் மக்களை பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்திடும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் எனப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சென்னை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் நீங்கலாக 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் உள்ள 3,994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் நுண் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தத் தேவையான புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், மகளிர் குழுக்களை தொழில் முனைவோராக உருவாக்கி, அந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கவும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வாயிலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

2023-24 ஆம் ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் மானியக் கோரிக்கையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் மகளிர் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்னவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவற்கும் 1000 கிராமங்களில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் “நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டம்” ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வாக முதலமைச்சர் இன்றையதினம் 10 மாவட்டங்களைச் சார்ந்த 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார். இந்த நிதியண்டிற்குள் 50 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் பயனாளர்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டுவரும் வட்டாரங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களாகவும், குறைந்தபட்சம் 30 சதவிகித பயனாளிகள் மாற்றுத் திறனாளிகளாகவும், நலிவுற்றோராகவும் இருப்பர். இவர்களின் தொழில் திட்டங்களின் அடிப்படையில் 70,000/- ரூபாய் வரை இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறவருக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும், நுண் தொழில் நிறுவன நிதியுதவி பெறும் தொழில் முனைவோர் தங்களுக்குத் தேவையான தொழில் மேம்பாட்டுச் சேவைகளை மதி சிறகுகள் தொழில் மையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் இ.பெரியசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா. பிரியங்கா பங்கஜம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ஜெ.இ.பத்மஜா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 5.16 கோடியில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. ,Bhoomalai ,Stalin ,Chennai ,M.K. Stalin ,Department of Rural Development and Panchayats ,Dinakaran ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்