×

அன்பு, அறம், அமைதி ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியேற்போம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: பக்ரீத் பண்டிகை நாளை (29ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர், அந்த வகையில்,

காங்கிரஸ்: இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடும் பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற திருநாளாகும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: அன்பு, அறம், அமைதி ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியேற்போம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இறைபக்தியையும் கடந்து திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித நேயத்தையும் தன்னலம் கருதாத ஈகை பண்பையும் போதிக்கும் பக்ரீத் பண்டிகை, துன்பத்தில் இருப்பவர்களுக்கும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும் செய்யும் உதவி, இறைவனுக்கு செய்யும் தொண்டு என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு போதித்த அன்பு, தியாகம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை உலகமெங்கும் செழித்து சமத்துவ சமுதாயம் வளர இந்த நாளில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏழைகளின் பசி போக்க உதவுதல், பொருளாதாரம் இல்லாமல் தவிப்போருக்கு உதவுதல் போன்ற தன்னலமின்றி உதவிகரம் நீட்டும் இஸ்லாமிய சகோதரர்களின் கருணை உள்ளத்தை கண்டு எப்போதுமே நான் நெகிழ்கின்றேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

The post அன்பு, அறம், அமைதி ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியேற்போம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Chennai ,Pakreet ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...