×

சென்னையில் குற்றம் நடக்கும் இடங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிய ‘ஜிஐஎஸ்’ வரைபட திட்டம் தொடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 28: சென்னையில் குற்றங்கள் நடக்கும் இடங்களை உடனே அறிந்து போலீசார் விரைந்து செல்வதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் ஜிஐஎஸ் வரைபட திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘நிர்பயா’ திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை பாதுகாப்பு நகரம் திட்டம் கடந்த 23ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னையில் குற்றங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளாக 1,750 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 1,336 இடங்களில் 4008 அதி நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 1,336 இடங்களில் எந்த குற்றங்கள் நடந்தாலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்களுக்கு உடனே அபாய எச்சரிக்கை அளிக்கும். அதன்படி, போலீசார் குற்றம் நடக்கும் இடங்களுக்கு விரைந்து செல்ல இந்த திட்டம் ஏதுவாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக 4008 சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சம்பவ இடங்களில் நடக்கும் குற்றங்களை துல்லியமாக கண்டறியும் வகையில், ஜிஐஎஸ் வரைபட திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம், ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘ஜிஐஎஸ்’ மென்பொருள் கருவி மூலம் சென்னையில் நடக்கும் தினசரி சேவை பதிவு, தினசரி சம்பவ அறிக்கைகள், பெருநகர சென்னை மாநகராட்சியில் இருந்து பெறப்படும் பிற முக்கியமான தரவுத் தொகுப்புகள், சமூக நலத்துறை மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் போன்ற துறைகளில் இருந்து பெறப்படும் தரவுகளை ஒருங்கிணைத்து தொகுக்க முடியும். அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு காலத்தில் அதாவது 7 ஆண்டுகளில் பெறப்பட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகளின் துல்லியமான புவி இருப்பிடங்களை பயிற்சி பெற்ற காவலர்கள் கொண்டு குறித்த வரைபடமாக்கப்பட்டுள்ளது. இணையவழி மூலம் ஜிஐஎஸ் மென்பொருள் பகுப்பாய்வு செய்தால், நகரம் முழுவதும் குற்றங்களை தடுக்க முடியும்.

குறிப்பாக ஜிஐஎஸ் மென்பொருள் மூலம் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் குற்றங்கள் நடந்தால் உடனே அந்த இடத்தை காட்சிப்படுத்த முடியும். உடனே அந்த இடத்திற்கு போலீசாரை அனுப்பி குற்றங்களை தடுக்க இந்த ஜிஐஎஸ் வரைபட திட்டம் பெருமளவில் உதவியாக இருக்கும். எனவே இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் பெருமளவு குற்றங்களை தடுக்க முடியும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, லோகநாதன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர் மற்றும் தொழில்நுட்ப தனியார் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சிறப்பு அம்சங்கள்
 அவசர நிலைகளை கையாளுதல், எந்தவொரு அவசரகால சூழலையும் கையாள்வதற்கான
வசதிகள்.
 பைகளை பறிப்பது மற்றும் திருடுவதை தடுத்தல், பேருந்து நிலையங்கள், வணிக பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அனைத்து முக்கியமான சாலையோர பகுதிகளை வரைபடம் மூலம் கண்காணித்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களை அடையாளம் காணுதல்.
 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நகரத்தில் எங்கு நடந்தது என அடையாளம் காணுதல்.
 ரோந்து பணிகள் திட்டமிடுதல், செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
 குற்றம் நடந்த இடத்திற்கு போலீசார் சென்றதை உறுதி செய்யவும், சம்பவ இடத்தின் விவரங்களை புகைப்படங்களுடன் படம் பிடிக்கவும் முடியும்.
 5 ஆயிரம் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ரோந்து பணிகளை தானியங்கி வாகன இருப்பிட அமைப்பு கொண்டு, சிறப்பு செல்போன் செயலி மூலம் கண்காணிக்கலாம்.

The post சென்னையில் குற்றம் நடக்கும் இடங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிய ‘ஜிஐஎஸ்’ வரைபட திட்டம் தொடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Shankar Jiwal ,Chennai, ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...