×

25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

தர்மபுரி, ஜூன் 28: உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறையினர் நேற்று தர்மபுரி நகரில் நடத்திய அதிரடி சோதனையில் அழுகிய நிலையில் 25 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில், தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட், சந்தைப்பேட்டை, பென்னாகரம் ரோட்டில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமணன், ஆய்வர் ஹசீனாபானு ஆகியோர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 3 கடைகளில் இருந்து 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 3 கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கினர். மேலும், அழுகிய மீன்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் அழுகிய மீன்கள், தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் படி, கடந்த வாரம் ஒகேனக்கல் பகுதியில் கொட்டுப்போன மீன்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். இதை தொடர்ந்து தர்மபுரியிலும் கொட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில், நேற்று சோதனை நடத்தியதில், சுமார் 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து பகுதிகளில் செயல்படும் மீன்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,food security ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்