×

உள்நாட்டு போரை தடுத்து நிறுத்திய ராணுவம், போலீசாருக்கு பாராட்டு: கிரெம்ளின் மாளிகையில் புடின் பேச்சு

மாஸ்கோ: ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படையினரால் ஏற்பட இருந்த உள்நாட்டு போரை விரைந்து தடுத்து நிறுத்திய ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் ரஷ்யாவின் துணை ராணுவம் அல்லது புடினின் தனி ராணுவம் என்று அழைக்கப்படும் வாக்னர் பிரைவேட் மிலிட்டரி கம்பெனி என்ற கூலிப்படை ஈடுபட்டுள்ளது. வாக்னர் கூலிப்படையினர் திடீரென ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது படையெடுத்தனர். பின்னர், புடினின் நெருங்கிய நண்பரும் பெலாரஸ் அதிபருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் படைகள் உக்ரைனுக்கு திரும்பின. இந்நிலையில், புடின் ஆற்றிய உரையில், துரோகிகளான வாக்னர் படையினர் உக்ரைன் அரசு மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு அரசுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கின்றன எனக் குற்றம் சாட்டிய புடின் பெயரைக் குறிப்பிடாமல் பிரிகோஷினை மறைமுகமாக விமர்சித்தார்.

பின்னர் புடின் கிரெம்ளின் மாளிகையில் நேற்று ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடனான சந்திப்பில், கூலிப்படையினரால் ஏற்பட இருந்த உள்நாட்டு போரை ஆக்கப்பூர்வமாக விரைந்து தடுத்து நிறுத்திய ராணுவம் மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த கிளர்ச்சியை மக்களும் ராணுவமும் ஆதரிக்கவில்லை. கூலிப்படையை சேர்ந்த வீரர்கள் ராணுவத்தில் சேரலாம் இல்லையென்றால் படையை விட்டு விலகலாம் அல்லது பெலாரஸ் செல்லலாம் என்று கூறினார். இதற்கிடையே, கிளர்ச்சியில் ஈடுபட்ட கூலிப்படை தலைவர் பிரிகோஷின் மற்றும் அதில் பங்கேற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக ரஷ்ய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்தியதால் கிளர்ச்சியில் ஈடுபட்ட அவர்கள் மீதான வழக்கை தொடரப் போவதில்லை என்று அது தெரிவித்துள்ளது.

* மர்மம் நீட்டிப்பு

வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் பெலாரஸில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பெலாரஸில் செயல்படும் தனியார் ராணுவ அமைப்பான பெலாரஸ்கி ஹஜூன், பிரிகோஷின் வழக்கமாக பயன்படுத்தும் ஜெட் விமானம் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், பிரிகோஷின் அங்கு இருப்பதை அவரோ அல்லது பெலாரஸ் அரசோ உறுதிபடுத்தவில்லை.

The post உள்நாட்டு போரை தடுத்து நிறுத்திய ராணுவம், போலீசாருக்கு பாராட்டு: கிரெம்ளின் மாளிகையில் புடின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Putin ,Kremlin ,Moscow ,Wagner ,Russia ,
× RELATED 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின்...