×

உறுப்பினராக பத்து ரூபாய் கேட்டதால் உச்சகட்ட கோபத்துக்கு சென்ற இலை கட்சி தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வெயிலூர் இலை கட்சியில விவாதங்கள் அனல் பறக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர், மாவட்டத்துல கட்சியில புதுசா உறுப்பினர்களை சேர்க்குறதுக்கு 10 ரூபா கேட்குறதுதான் பலரை டென்ஷனில் கொதிப்படைய செய்து இருக்காம். கடந்த 10 வருஷமா கட்சி ஆட்சியில இருந்தப்போ, கோடியில சம்பாதிச்சுட்டு, 10 ரூபா கூட, அடிமட்ட நிர்வாகிங்கதான் மெம்பராக கொடுக்கணுமானு புலம்பி வர்றாங்க. அந்த அம்மா இருக்குற வரைக்கும் அந்தந்த ஒன்றியம், பகுதி, நகரம், மாநகரம், மாவட்டம்னு தலைமை பொறுப்புல இருந்தவங்க உறுப்பினர் கட்டணத்தை கட்டி, அதற்கான உறுப்பினர் அட்டையை மட்டும் எங்க கிட்ட கொடுத்தாங்க. ஆனா, இப்போ எல்லாம் தலைகீழா மாறிடுச்சாம். வட்டம், கிளைனு அடிமட்ட தொண்டருங்ககிட்ட மெம்பர்ஷிப் பாரத்துக்கு 10 ரூபாய் வசூல் செய்யறாங்களாம். இதனால வர்ற ஒன்னு ரெண்டு பேரும் சாமி கட்சியில உறுப்பினரும் வேண்டாம். பொறுப்பும் வேண்டாம்னு ஓட்டம் பிடிக்குறாங்களாம். இலைகட்சியில, இந்த 10 ரூபா மேட்டருதான் வெயிலூர் மட்டுமில்ல தமிழகம் முழுவதும் ஹாட் டாபிக்கா ஓடிட்டிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மைன்ஸ் ஆபீசரை கெஞ்சி கூத்தாடும் விவசாயிகள் பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ கோவை, திருப்பூர்ல இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினமும் 5 ஆயிரம் லோடு ஜல்லி, எம் சாண்ட் சப்ளை செய்றாங்களாம். கேரளா பதிவு லாரிங்கதான் அதிகமாக குவாரிக்குள் வலம் வருதாம். பெரும்பாலான லோடுகள், பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை, சித்தூர், திருச்சூர், எர்ணாகுளம் வரைக்கும் போகுதாம். ஆனா இதை தடுக்க கோவை கனிம வளத்துறை அதிகாரிங்க எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம், மாமூல் கேட்டு குவாரிக்காரங்கள டார்ச்சர் பண்றாங்களாம். ‘‘எங்களால முடியல விட்டுருங்க, நாங்க குவாரியே நடத்தல…’’ என கான்ட்ராக்ட் எடுத்தவங்க கொதிச்சு போயிட்டாங்களாம். உடனே அதிகாரிங்க, ‘‘கொஞ்ச நாள் பொறுமையா இருங்க… ஆத்து மணல் அனுமதி வந்துரும்… அப்புறம் நீங்க எல்லாம் வீட்டுக்கு போகனும்னு..’’ சொல்லி மிரட்டுறாங்களாம். மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை என ஏகப்பட்ட துறைகள் கண்காணிப்பும் இருந்தும், கனிமவளத்துறையில் ஏன் இப்படி தப்பு நடக்குது. கேரளாவுக்கு கனிமம் கடத்துறது யாருங்க, அதை ஏன் இன்னும் தடுக்கலைன்னு என கேள்வி மேல் கேள்வி எழுகிறதாம். இப்படியே போச்சுனா கோவை பாலைவனமா போயிரும்… மைன்ஸ் ஆபீசர் மனசு வைத்தால் கோவை, திருப்பூரை காப்பாற்றலாம்னு, ஊழியர்கள், விவசாயிகள் பேசிக்கிறாங்க…’ என்றார் விக்கியானந்தா. ‘‘மட்டன் பிரியாணி யாரு, யாருக்கு பறிமாறினா…’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த 3 மாதங்களாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இதில் கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39 மீனவ இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சியின் நிறைவு நாளில் அவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. கூடவே கடும் பயிற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கு குமரி மாவட்ட எஸ்.பி. சார்பில் சுடச்சுட மட்டன் பிரியாணி வழங்க உத்தரவிட்டாராம். அதனை தனது கையால் இளைஞர்களுக்கு பரிமாறி அசத்திவிட்டாராம். எல்லா அதிகாரிகளும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று பயிற்சி பெற்ற இளைஞர்கள் சந்தோஷத்தில் மிதந்தாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுச்சேரி போலீஸ்ல ரோமியோ ெதால்லையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில 381 ஆண், பெண் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் பல்வேறு பயிற்சிகள் முடிந்து, காவல் நிலையங்களுக்கு போனாங்க. இதற்கிடையே 2 பக்கத்துக்கு பெண் காவலர்கள் தரப்பில் பெயர் குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் முதல்வர், உள்துறை அமைச்சருக்கு போச்சாம். அதுல ஆயுதப்படையின் சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெகட்ர் பொறுப்பில் இருக்கும் 2 கொக்கி குமார்களின் ரோமியோ அட்ராசிட்டி குறித்து வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

பயிற்சியின்போது பெண் காவலர்களிடம் உரிமையாக பேசுவதுபோல பேசி கொக்கி போடுகின்றனர். வெறிப்பிடித்தவர்கள் போல பெண்கள் இருக்கும் பகுதியிலேயே சுற்றி வர்றாங்க ஆண் காவலர்கள். பயிற்சியை கற்றுத்தருகிறேன் என அங்கும், இங்கும் உரசி பாலியல் தொல்லை தர்றாங்க. எப்போதும் ஆபாச செய்கைதான், இணங்கிப்போகும் பெண் காவலர்களுக்கு மட்டும் பயிற்சியின்போது செல்போன் உபயோகப்படுத்தலாம் என சிறப்பு அனுமதியாம். அதோடு மெஸ்சில் இருக்கும் அறையில்தான் எல்லாமே நடக்குதாம். ஒரு பெண், காவலர்களுக்கு முத்தமழை பொழிந்ததை பார்த்துவிட்ட ஆண் காவலர்களை பயிற்சி என்ற பெயரில், தினமும் கடுமையான பயிற்சி அளித்து அந்த பக்கம் வரக்கூடாது என சொல்லாமல் அறிவுறுத்துகின்றனராம். எதிர்த்து கேள்வி கேட்டால், இது என்னுடைய கோட்டை, நான்தான் இங்கு ராஜா, என்னை மீறி இங்கு எந்த சட்டமும் எடுபடாது. நான் வைத்ததே சட்டம், இங்கிருக்கும் உயரதிகாரி யாரும் என்பக்கமே வரமாட்டார்கள். அவர்கள் குடிமி எங்களிடம் என கொக்கறிக்கிறாராம். அதோடு உயரதிகாரி பஞ்சாபகேசன் எங்க மொழிக்காரர், ஒன்னும் செய்ய முடியாது எனக்கூறுவதாக கடிதத்தில் புலம்பி தள்ளி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post உறுப்பினராக பத்து ரூபாய் கேட்டதால் உச்சகட்ட கோபத்துக்கு சென்ற இலை கட்சி தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : leafy ,Weilur Leaf Party ,Peter ,Vailur ,District Party Puduza ,Leaf Party ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது