×

செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம்: ஆட்கொணர்வு மனு மீது மூத்த வழக்கறிஞர்கள் வாதம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ‘‘கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அவரை சட்டவிரோதமாக கைது செய்தது நிரூபணமாகியுள்ளது.

நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரியின் (போலீஸ் இன்ஸ்பெக்டர்) அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை. செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்தது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யும்போதே அதற்கான காரணங்களை கூறவேண்டும். இது அரசியலமைப்பு ஷரத் 21ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டு 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் கைது தொடர்பான ஆவணங்கள் தரப்பட்டது. கைது செய்வதற்கு முன்பு அவரது சகோதரருக்கும் உறவினர்களுக்கும் இமெயில் வாயிலாக தரப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது. கைது மெமோவை செந்தில் பாலாஜி வாங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரை கைது செய்யும்போது அந்த மெமோ தரப்படவில்லை. இதை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

நீதிமன்ற காவலில் இருக்கும்போது போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் போலீஸ் காவல் விசாரணக்கு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, நீதிமன்ற காவலில் வைக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை. மாறாக ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார்.

செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிலும், அமலாக்க துறை காவலிலும் வைத்து விசாரிக்க அனுமதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானதல்ல. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்மன் அனுப்பினாலும் பதில் இல்லை. கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கில் ஆதாரங்களும், அடிப்படை முகாந்திரமும் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுகள் தெரிவித்துள்ளன. செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவர் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக கருதக் கூடாது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு போலீசாரின் அதிகாரம் வழங்காததால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை என்று கூற முடியாது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு மீது டெல்லி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என்று கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது முடிந்தது தான். கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது. 15 நாட்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது. வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

செந்தில் பாலாஜியை கைது செய்யும்போது அருகில் இருந்த அவருக்கு கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல் அவரது சகோதரருக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட ஆவணமான கைதுக்கான மெமோவில் 16ம் தேதி என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரை கைது செய்தது 14ம் தேதி நள்ளிரவு 1.39 மணிக்கு. இதிலிருந்தே இந்த கைது சட்ட விரோதமானது என்று தெரிகிறது. ஒருவரை ைகது செய்வதற்கு முன்பு அவருக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 41 (ஏ)ன்கீழ் கைதுக்கான காரணத்தை தெரிவித்து நோட்டீஸ் தரவேண்டும். இது இந்தியாவில் உள்ள எந்த விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுவானது. இதை உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன என்றார்.

இதையடுத்து, முகுல் ரோத்தகி வாதத்துக்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத் துறையின் உரிமை. காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இரு தரப்பும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 15 நாட்கள் முடிந்தது முடிந்தது தான். கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது.

The post செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம்: ஆட்கொணர்வு மனு மீது மூத்த வழக்கறிஞர்கள் வாதம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Madras High Court ,Chennai ,Megala ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்...