×

திருப்பதியில் 3 டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்பயாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதியில் 3 டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு நேற்று புஷ்பயாகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நேற்று புஷ்பயாகம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் மே 26ம் தேதி தொடங்கி ஜூன் 3 வரை நடைபெற்றது. பிரமோற்சவம் மற்றும் நித்யகைங்கர்யங்களின் போது அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்களால் ஏற்படும் தவறுகளுக்கும், தோஷங்களுக்கும் பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

இதனையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு தேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், கோயில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.னிவாச தீட்சிதுலு தலைமையில் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுக்கு நடுவில் அர்ச்சகர்கள் புஷ்ப யாகம் நடத்தினர். இதில் மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி, துளசி, மருவம், தவனம், வில்வம், பன்னீர் இலை என 12 வகையான 3 டன் மலர்கள் கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதற்காக ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த நன்கொடையாளர்களால் இந்த மலர்கள் வழங்கப்பட்டது. மாலை கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அதிகாரி சாந்தி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சீனிவாசலு, ஏஇஓ ரவிக்குமார், கண்காணிப்பாளர் மோகன்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post திருப்பதியில் 3 டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்பயாகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Pushpayagam ,Govindaraja ,Tirupati ,Tirumala ,Govindaraja Swamy ,Swami ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...