×

முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (27.6.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 27 ஆம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டார். அதன்படி, சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மானியத்திற்கான ஆணைகள் வழங்குதல்

இவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள், சமத்துவபுரம் தந்து சமூக நீதி காத்திட்ட சமூக நீதி காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைக்கான நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் ஒரு சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இத்தகைய மானிய சலுகையுடன் வேறு எந்த மாநிலத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் இதுவரை 127 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ. 24.26 கோடி மானியத்துடன் ரூ. 45 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தல்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம்- கொடூர், திருச்சி மாவட்டம் – மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் – சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 21,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தொடங்கி வைத்தல்

குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பரவலாக குறுந்தொழில் நிறுவனங்கள் கொண்ட பல்வேறு குறுங்குழுமங்கள் (Micro Cluster) உள்ளன. ஊரகப்பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிபடுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது ஆகும். இக்குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக “குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, இதுவரை 28 குறுங்குழுமங்கள் ரூ.117.33 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் ரூ.143.47 கோடி திட்டமதிப்பீட்டில் அமைத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்நிகர் கண்காட்சியகத்தை தொடங்கி வைத்தல்

இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றி பெற்ற மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுத்தொகை வழங்குதல்

மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, மாணவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் படிப்பு முடித்தப்பிறகு பலருக்கு வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம்” தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் பதிப்பின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின், புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல்

சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய ரூ.1510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான ஃபேம் டிஎன் (FaMe TN) அமைப்பிற்கும், தொழில்முனைவோர்களுக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சிட்பி மூலம் கடன் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் சலுகைகளை வழங்கிடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சிட்பி மூலம் நிதி ஆதாரங்கள் ஏற்படுத்திடவும் கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான ஃபேம் டிஎன் (FaMe TN) மற்றும் சிட்பி (SIDBI) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்குதல்

விழாவின் நிறைவாக, தொழில்துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருதினை ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் காஞ்சிபுரம்-பிரிசிசன்ஸ் எக்யுப்மெண்ட்ஸ் (சென்னை) பிரைவேட் லிமிடெட் (Precision Equipments (Chennai) Pvt. Ltd.,) நிறுவனத்திற்கும், மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருதினை வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் காஞ்சிபுரம்-யுனிடெக் பிளாஸ்டோ காம்பொனன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Unitech Plasto Components Pvt. Ltd.,) நிறுவனத்திற்கும், மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருதினை மாம்பழ கூழ் தயாரிக்கும் கிருஷ்ணகிரி – பவித்ரன் அசப்டிக் ப்ரூட் புராடக்ட் (Pavithran Aseptic Fruit Product) நிறுவனத்திற்கும், மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருதினை விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் சேலம் – ஏரோஸ்பேஸ் என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Aerospace Engineers Pvt. Ltd.,) நிறுவனத்திற்கும், மாநில அளவிலான சிறந்த சிறப்புப் பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருதினை இயந்திர தளவாடங்கள் தயாரிக்கும் கோயம்புத்தூர் – DM என்ஜினியரிங் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கி, வாழ்த்தினார்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதிவசதியினை சிறப்பாக வழங்கிய சிறந்த வங்கிக்கான முதலிடத்திற்கான விருதினை இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் இடத்திற்கான விருதினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், மூன்றாம் இடத்திற்கான விருதினை பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, வாழ்த்தினார்.

The post முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Cuddalore district ,Chennai ,Tamil Nadu ,Mr.M.K.Stalin ,International Trade Center ,Nandambakkam, Chennai ,Cuddalore ,District ,Cashew Processing Small Industry Group ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...