×

கிரிவலப்பாதையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி எஸ்பி தொடங்கி வைத்தார் போதை பொருள் ஒழிப்பு தினம் முன்னிட்டு

திருவண்ணாமலை, ஜூன் 27: திருவண்ணாமலையில், போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. அதனை, எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில், திருவண்ணாமலையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திருவண்ணாலை கிரிவலப்பாதையில், அண்ணா நுழைவு வாயில் அருகே தொடங்கிய போட்டியை, எஸ்பி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிரிவலப்பாதையில் அபயமண்டபம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் வரை மாரத்தான் போட்டி நடந்தது. அதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மினி மாரத்தான் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு, எஸ்பி கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். மேலும், மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுடன், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஐ லவ் யூ செல்பி பாயிண்ட் அருகே குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்றனர்.

முன்னதாக, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் எஸ்பி தொடங்கி வைத்து, அதில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி பழனி, டவுன் டிஎஸ்பி குணசேகரன், கலால் பிரிவு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேட்டவலம்: வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் போலீசார் சார்பில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆசிரியர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் பழனிவேல் வரவேற்றார். பேரணியை எஸ்ஐ யுவராஜ் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் அருகே போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி பஸ் நிலையம், பிடிஓ அலுவலகம், பெரிய தெரு வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகம் எதிரே நிறைவு பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

செய்யாறு: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடந்தது. தலைமையாசிரியர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக், எஸ்ஐ சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செய்யாறு போலீஸ் டிஎஸ்பி வெங்கடேசன் பங்கேற்று போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்த பேரணி காந்தி சாலை, ஆற்காடு சாலை, தாலுகா அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், செய்யாறு அடுத்த மாமண்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தூசி எஸ்ஐ சுரேஷ்பாபு, உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி: போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆரணி நகர காவல் நிலையம் முன்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்ஐக்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், வட்டார கல்வி அலுவலர் கமலக்கண்ணன், தலைமையாசிரியர் தாமரைசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஏஓ ஜெயச்சந்திரன் வரவேற்றார். ஆர்டிஓ தனலட்சுமி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ஆரணி டவுன் பழைய, புதிய பஸ் நிலையம், காந்தி சாலை, அண்ணா சிலை, நகராட்சி வளாகம், கோட்டை மைதானம் வழியாக வந்து தாலுகா அலுவலகம் முன்பு முடிந்தது. இதில் எஸ்ஐக்கள் ஷாபுதீன், சுந்தரேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிரிவலப்பாதையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி எஸ்பி தொடங்கி வைத்தார் போதை பொருள் ஒழிப்பு தினம் முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : SP ,Kriwalabathi ,Drug Abolition Day ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Anti-Drug Day ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...