×

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை 10 மடங்கு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

வேடசந்தூர், ஜூன் 27: வடமதுரை, எரியோடு, அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் தோட்டத்தில் விளையும் தக்காளிகளை அய்யலூர் ஏலச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஏலம் விடப்படுகிறது. இங்கு ஏலம் எடுத்து தக்காளிகளை வாங்கும் வியாபாரிகள் அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இங்கு சராசரியாக நாளொன்றுக்கு 15 டன் வரை தக்காளி வணிகம் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக தக்காளியின் வரத்து அதிகமானதால், அதன் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் 14 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள், தக்காளிகளை சாலையோரம் கொட்டி சென்றனர்.

இந்நிலையில் தற்போது அய்யலூர் ஏலச்சந்தைக்கு தக்காளி வரத்தானது வழக்கத்தை காட்டிலும் மிக, மிக குறைவாக வருவதால் (0.5 டன்) தக்காளி விலை அதிகரித்துள்ளது. நேற்று 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டியின் விலை ரூ.1,100 முதல் ரூ.1,350 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தக்காளிக்கு எப்போதுமே நிலையான விலை இருப்பதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். எனவே அய்யலூரில் தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

The post அய்யலூர் சந்தையில் தக்காளி விலை 10 மடங்கு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ayyalur market ,Vedasandur ,Vadamadurai ,Eriodu ,Ayyalur ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...