×

இந்தியாவின் வாக்னர் படையால் மோடியின் ஆட்சி வீழ்த்தப்படும்: உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு

புனே: இந்தியாவின் வாக்னர் படையால் மோடி ஆட்சி வீழ்த்தப்படும் என்று உத்தவ் தாக்கரேவின் சாம்னா பத்திரிகையில் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உத்தவ் தாக்கரேவும் இதில் கலந்து கொண்டார். இந்த நிலையில் சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கம் ஒன்றில், ஆளும் பா.ஜ.வுக்கு எதிராக திரண்ட அனைத்து எதிர்க்கட்சிகளை ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் குழுவுடன் ஒப்பிட்டு கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் வாக்னர் அமைப்பை ஜனநாயக காவலர் என சாம்னா தெரிவித்துள்ளதுடன், அதனை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சாம்னாவில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் புதினின் சர்வாதிகாரத்தை சவால் செய்ய முடியும் என்று வாக்னர் குழு நமக்கு செய்து காட்டியது. இதில் இருந்து தெரிவது ஒன்றுதான், அது பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி, புதினாக இருந்தாலும் சரி, அவர்கள் கிளர்ச்சியை சந்திக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அரசை ஒரு அகிம்சை வாக்னர் குழு மூலம் அகற்றப்படும். அந்த பாதை வாக்குப்பெட்டி வழியாக இருக்கும். இந்தியாவின் வாக்னர் குழு ஜனநாயகத்தின் பாதுகாவலராக பாட்னாவில் ஒன்று சேர்ந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2024 ல் முடிவுகளைத் தீர்மானிக்காது. ஆனால் மக்கள் முடிவு செய்வார்கள். மின்னணு இயந்திரத்தில் முறைகேடு நடந்தால், மணிப்பூர் போன்ற சூழல் நாட்டில் ஏற்படும். அதுபோன்ற கோபம் மக்கள் மத்தியில் ஒன்றிய அரசுக்கு எதிராக உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் குழுவைப் போல பலரை பாஜ தனது பாதுகாவலர்களாக வைத்துள்ளது. நாளை அதே நபர்கள் அவர்களின் முதுகில் குத்துவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

The post இந்தியாவின் வாக்னர் படையால் மோடியின் ஆட்சி வீழ்த்தப்படும்: உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,Wagner force ,Uddhav Thackeray ,Pune ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...