×

தமிழ்நாடு சித்ரவதைகள் தடுப்புச் சட்டம் குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் காவல்நிலைய சித்ரவதைகள் உட்பட அனைத்து வகை சித்ரவதைகளையும் தடுக்க ‘‘தமிழ்நாடு சித்ரவதைகள் தடுப்புச் சட்டம்’’ என்ற சட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில், சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் தலைமையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராஜஇளங்கோ, கண்ணதாசன் முன்னிலையில் சித்ரவதைக்கு எதிரான மாநில அளவிலான பிரசார தொடக்க விழாவை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு சித்ரவதைக்கு எதிரான மாநில அளவிலான பிரசார தொடக்க விழா நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் காவல்துறை சித்ரவதை தவிர்க்கவேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், முன்மாதிரியாக ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை முதல்வர் கவனத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் கவனத்துக்கும் கொண்டு செல்வேன். காவல்துறை, அரசு துறை, சாதி மதம், குடும்பம் என்ற எந்த வகை சித்ரவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எதிர்க்கும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

பால் கொள்முதல் 3.30 லட்சம் லிட்டரை கடந்துள்ளது. அது தொடர்ந்து அதிகரிக்கும். அரசு நிறுவனங்களுக்கு ஆவின் வழங்கும் பாலின் அளவை 17 லட்சம் லிட்டர்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நியமான விலை கிடைக்கவும் அதேசமயத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான பால் வழங்க வேண்டும் என்று இந்த அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் வரலட்சுமி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தை சேர்ந்த அஜிதா, ஷீலு பிரான்சிஸ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தமிழ்நாடு சித்ரவதைகள் தடுப்புச் சட்டம் குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Chennai ,Tamil Nadu ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...