×

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக சிறைகள், சீர்திருத்தத்துறை நம்பர் 1 சான்றிதழ் பெற்றுள்ளது: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: இந்தியாவிலேயே, தமிழக சிறைகள், சீர்திருத்தத்துறை நம்பர் 1 சான்றிதழ் பெற்றிருக்கிறது என, சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக சிறை துறை சார்பில், புழல், அம்பத்தூர் சாலை சிறைத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகே புதிதாக 2வது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை நேற்று மாலை சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ புழல், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கோவை, வேலூர் ஆகிய ஐந்து இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது. கூடுதலாக புழல், கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், புழல் பெட்ரோல் பங்கில் பகல் நேரம் முழுவதும் பெண் கைதிகள் 2 ஷிப்டில் பணியாற்ற உள்ளார்கள்.

இதன் மூலம் பெண் கைதிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.6000 அவர்களது குடும்பத்திற்கு அனுப்ப முடியும். சிறைத்துறை சார்பில், சிறை காவலர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கும். இந்தியாவிலே தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை நம்பர் 1 என்ற நற்சான்றிதழ் பெற்றிருக்கிறது. கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு அவர்களின் தகுதி கண்டறியப்பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. புழல் சிறையில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய கைதிகள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொழிற்கல்வி மட்டும் இன்றி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் உயர்கல்வியை கைதிகள் பயின்று வருகின்றனர். கைதிகள் விடுதலையாகி செல்லும்போது பட்டதாரி ஆகவும், பிளஸ் டூ முடித்தவராகவும் தொழிற்கல்வி முடித்தவராகவும் செல்கிறார்கள் என அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி, மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், சிறைத்துறை துணை தலைவர்கள் முருகேசன், கனகராஜ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் இந்திய ஆயில் நிர்வாகத்தினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக சிறைகள், சீர்திருத்தத்துறை நம்பர் 1 சான்றிதழ் பெற்றுள்ளது: அமைச்சர் ரகுபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu Prisons, ,Correctional Department ,Minister ,Raghupathi ,Chennai ,Tamil Nadu Prisons and Correctional Department ,Minister of Law and Prisons ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...