×

நாட்டில் முதன்முதலாக செயற்கை கருவூட்டல் மூலம் திருப்பதி கோசாலையில் ஓங்கோல் பசுவிற்கு சாஹிவால் கன்று பிறந்தது

*‘பத்மாவதி’ என பெயர் சூட்டப்பட்டது

திருமலை : நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் திருப்பதி கோசாலையில் ஓங்கோல் பசுவிற்கு சாஹிவால் கன்று பிறந்தது, அந்த கன்றுக்கு பத்மாவதி என அதிகாரிகள் பெயர் சூட்டினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் பத்மாவதி தயார் கோயிலில் சுவாமி அபிஷேகத்திற்கும், தீபம் மற்றும் நெய்வேத்தியம் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பால், வெண்ணெய், நெய் ஆகியவை தேசிய நாட்டு மாட்டு பாலை கொண்டு செய்யப்படுகிறது. இதற்காக மாடுகள் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கக்கூடிய நிலையில் தேவஸ்தானமே இதனை உற்பத்தி செய்ய முடிவு செய்தது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அழிந்து வரக்கூடிய தேசிய இன நாட்டு மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவஸ்தானத்திற்கு தேவையான பால், நெய், வெண்னய் ஆகியவை சொந்தமாக தயாரிக்க அப்போதைய செயல் அதிகாரி ஜவகர் முடிவு செய்தார்.

இதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வர பல்கலைக்கழகத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு தேவையான அரிதான நாட்டு மாடுகளை உற்பத்தி செய்ய செயற்கை கருவூட்டல் மூலம் தேசிய மாடுகளின் கலப்பினத்தை உருவாக்க, செயற்கை கருவூட்டல் ஆய்வகம் அமைக்க தேவஸ்தானம் ₹3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து சாஹிவால் இன நாட்டு மாட்டின் கரு ஓங்கோல் மாட்டின் கருமுட்டையில் வைக்கப்பட்டது. இந்நிலையில், கருவூட்டல் செய்யப்பட்ட மாடு நேற்று முன்தினம் மாலை ஒரு கன்று ஈன்றது. நாட்டிலேயே முதன்முறையாக ஓங்கோல் பசுவிற்கு கரு பரிமாற்றம் மூலம் சாஹிவால் கன்று பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செயல் அதிகாரி தர்மா திருப்பதியில் உள்ள எஸ்.வி.கோசாலையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாட்டு மாடு இனத்தை உருவாக்க எஸ்.வி.கோசாலையில் நாட்டு மாடுகளிடமிருந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு, எஸ்.வி.கால்நடை பல்கலைக்கழகத்தின் ஐ.வி.எப் ஆய்வகத்தில் செயற்கை முறையில் கருக்கள் உருவாக்கப்பட்டன. நாட்டிலேயே முதன்முறையாக தேவஸ்தான கோசாலையில் மாடுகளில் இவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஓங்கோல் பசுவிற்கு பிறந்த சாஹிவால் கன்றுக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயில் அபிஷேகம் மற்றும் தீபம் ஏற்றவும், நெய்வேத்தியம் செய்ய ஏற்கனவே 200 நாட்டு மாடுகளை நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளனர். மேலும் 300 நாட்டு மாட்டு பசுக்களை வழங்க தயாராக உள்ளனர். மாடுகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அதிக பால் கொடுக்கும் விதமாக அதற்கான ஊட்டச்சத்து மிகுந்த தரமான தீவனம் தயாரிக்க கோசாலையில் தீவன உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

கோசாலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை பசும்பால் உற்பத்தியும், பாரம்பரிய முறைப்படி நாள் ஒன்றுக்கு 60 கிலோ சுத்தமான நெய் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதை கைவிட்டு மாடுகளை கொண்டு இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்வதை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு இலவசமாக பசுக்களை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் இணை செயல் அதிகாரி சதா பார்கவி, கோ பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம் சுனில், கோசாலை இயக்குனர் ஹரிநாத், எஸ்.வி.கால்நடை பல்கலைகழகத்தின் டீன் வீர பிரம்மையா மற்றும் வெங்கட் நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

The post நாட்டில் முதன்முதலாக செயற்கை கருவூட்டல் மூலம் திருப்பதி கோசாலையில் ஓங்கோல் பசுவிற்கு சாஹிவால் கன்று பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Sahiwal ,Ongol ,Cow ,Tirupati Gosal ,Padmavathi ,Tirumalai ,Ongol Cow ,Tirupati Gosala ,
× RELATED காலப்போக்கில் கானல் நீரான பூம்பூம் மாடு