×

மல்லிகை சாகுபடியில் பூச்சி தாக்குதல் -கட்டுப்படுத்த ஆலோசனை

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சுற்றுப்புற பகுதிகளில் செக்கணம், காட்டூர், திருக்காம்புலியூர், எழுதியம்பட்டி, தொட்டியபட்டி போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமானதால் மல்லிகை பூச்செடி பூப்பதற்கு முன்பே மொட்டுகள் புழுக்கள் தாக்கி கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் வட்டார தோட்டக்கலை சார்பில் மல்லிகையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு முறையில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் மல்லிகை, அதன் கவர்ந்திழுக்கும் நறுமணத்தால் முக்கிய வணிக மலராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவை உள்நாட்டு தேவைக்கு மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் சுமார் 750 ஏக்கர் பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய பயிரான இது, சில சமயம் சத்து குறைபாட்டினாலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலினாலும் மகசூல் குறைந்து காணப்படுகிறது. எனவே, முறையான உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறையை கையாளுவதன் மூலம் பூக்களின் தரத்தையும், மகசூலையும் அதிகரிக்க முடியும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் மல்லிகை செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழுவுரத்துடன் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து, 120 கிராம் சாம்பல் சத்து என்ற அளவு உரங்களை இரு பகுதிகளாக பிரித்து 6 மாத இடைவெளியில் இருமுறையாக கொடுக்க வேண்டும். கவாத்து செய்தவுடன்(நவம்பர்-டிசம்பர் மாதத்தில்) ஒரு முறையும் பின்பு ஜீன் – ஜீலை மாதத்தில் மறுமுறையும் இட வேண்டும். உரமிடும் போது செடியிலிருந்து 30 செ.மீ தள்ளி வட்ட வடிவில் 15 செ.மீ ஆழத்தில் இட்டு நன்கு கொத்தி மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்களில் இரும்புச்சத்து பற்றாக்குறை தென்படும். இப்பற்றாக்குறையுடன் வளரும் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இதைச் சரி செய்ய மாதம் ஒருமுறை 0.5 சதம் பெரஸ் சல்பேட் கரைசலை தெளிக்க வேண்டும். இரும்பு, துத்தநாகம் மெக்னீசியம் மற்றும் போரான் ஆகிய நுண்ணுாட்டச் சத்துக்கள் குண்டுமல்லிக்கு மிக முக்கியமானவை. ஆகவே நுண்ணுாட்டச் சத்து குறைபாடினால் ஏற்படும் மகசூல் இழப்பை குறைக்க துத்தநாக சல்பேட், மெக்னீசியம் சல்பேட், பெரஸ் சல்பேட் மற்றும் போராக்ஸ் இவை ஒவ்வொன்றையும் லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

‘எத்ரல்’ என்னும் வளர்ச்சி ஊக்கியினை 10 லிட்டர் நீரில் 1.25 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிப்பதால் மலர் உற்பத்தி செய்யும் தண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிக்கிறது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: மொட்டுப்புழு அடர்ந்த பச்சை நிறத்தில் கறுப்பு நிறத் தலையுடன் காணப்படும் மொக்குப்புழு அதிக சேதத்தை விளைவிக்கும். இப்புழுக்கள் மொட்டுகளில் துளையிட்டு மொட்டின் உட்பகுதி முழுவதையும் தின்றுவிடும். மொட்டுகளில் உள்ள சிறு துளையின் மூலமாக இப்பூச்சியின் தாக்குதலை அறியலாம். தாக்கப்பட்ட மொட்டின் நிறம் இளஞ்சிவப்பாக மாறும்.

இதனை கட்டுப்படுத்த தாக்குதலுக்குள்ளான மொட்டுகளை வாரத்திற்கு ஒரு முறை பறித்து அழிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 15 விளக்குப் பொறிகள் வைப்பதன் மூலம் அந்துப் பூச்சிகளைப் பிடித்து அழித்து இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும் ஸ்பைனோசாட் (Spionsad) 0.5 மி.லிட்டர் அல்லது தெயோகுளோபிரிட் (Thiochlorprid) 1 லிட்டர் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என தோட்டக் கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

The post மல்லிகை சாகுபடியில் பூச்சி தாக்குதல் -கட்டுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Karur district ,Sekkanam ,Kattur ,Thirukampuliyur ,Kalyampatti ,Thaniyapatti ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...