×

கீழவைப்பார், சிப்பிகுளத்தில் குடிநீர் வழங்கல்

குளத்தூர்: தினகரன் செய்தி எதிரொலியாக கீழவைப்பார், சிப்பிகுளம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த கடலோர பகுதியில் கீழவைப்பார், சிப்பிகுளம் கிராமங்கள் அமைந்துள்ளன. சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை கொண்ட இக்கிராமம் முழுக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி உள்ளது. கிராம மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் ஊராட்சி மூலம் அருகிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் தொட்டிகளில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் பிடித்து உபயோகித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அது போதுமானதாக இல்லாததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் ஊராட்சி மூலமாக கீழவைப்பார், சிப்பிகுளம் கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஒரு மாதமாக தடைபட்டது.

இதனால் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வந்தனர். இதுகுறித்து கடந்த வாரம் தினகரன் நாளிதழில் செய்தி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் பிடிஓ தங்கவேல் தலைமையிலான அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தண்ணீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவருக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து ஊராட்சி தலைவி ரோஸ்மலர், பம்பு ஆபரேட்டர்களை கொண்டு உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து குழாய்களை சீரமைத்து கீழவைப்பார், சிப்பிகுளம் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கினார். துரிதமாக செயல்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post கீழவைப்பார், சிப்பிகுளத்தில் குடிநீர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Keelavabar, Sippikulam ,Kulathur ,Dhinakaran ,Chippikulam ,Kulathur, Thoothukudi district ,Keezavaipbar ,Sippikulam ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...