×

பணி செய்ய விடாமல் தடுத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

சிதம்பரம், ஜூன் 26: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற விளம்பர பலகையை அகற்ற கோரியபோது தீட்சிதர்கள் பணி செய்யவிடாமல் தடுத்துவிட்டதாக சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா நேற்று சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதியிடம் புகார் அளித்துள்ளார். அதில், இணை ஆணையரின் உத்தரவின்படி நேற்று முன்தினம் நடராஜர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.

அப்போது ஜூன் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நான்கு தினங்களுக்கு கனக சபையின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற விளம்பர பலகை பொது தீட்சிதர்களால் அரசு அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதை கண்டேன். இது தமிழக அரசின் அரசாணை நிலை எண் 115 / 17-5-2022 சட்டப்படி குற்றமாகும். எனவே நான் அந்த விளம்பர பலகையை நீக்க சொல்லி கேட்டபோது ”முடியாது” என்று மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு புகார் தெரிவித்து, அவர்களின் உதவியுடன் பலகையை அற்ற முயற்சித்தபோது என்னை பணி செய்யவிடாமல் தடுத்து, என்னை அச்சுறுத்தும் வகையில் பொது தீட்சிதர்களின் செயலாளர் மற்றும் இதர தீட்சிதர்கள் மிரட்டும் தொனியில் கடுமையாக
பேசினர்.

எனவே எனது பணியினை பார்க்கவிடாமல் இடையூறாக இருந்த நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் மற்றும் இதர திட்சிதர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பலகையை அகற்றியும் அரசாணையின்படி மீண்டும் பொதுமக்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இதுபோன்று சிதம்பரத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த தீட்சிதர்களை கைது செய்ய கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரகுபதியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது தீட்சிதர் புகார் சிதம்பரம் நடராஜர் கோயில் வைபவங்களுக்கு இடையூறாக செயல்படும் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தார். அதில், நடராஜர் கோயில் வழக்கப்படி ஆனி திருமஞ்சன விசேஷ பூஜைகளின் நேரங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பக்தர்கள் கனகசபை மேல் ஏறி வழிபடுவது இல்லை என எழுதபட்ட விவர பலகை கனகசபையின் மேற்கு பகுதியில் தற்காலிகமாக பொருத்தப்பட்டது. பூஜை விதிமுறைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலரின் உதவியாளர் தன்னிச்சையாக வாசகங்களை அழித்தார்கள். இந்து அறநிலைய ெசயல் அலுவலர் சரண்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post பணி செய்ய விடாமல் தடுத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nataraja Temple ,Chidambaram ,Cuddalore District ,Nataraja ,temple ,Kanagasabha ,Sami ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...