×

ரூ.80 லட்சம் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி எக்ஸ்போர்ட் தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, ஜூன் 26: புதுவை முத்தியால்பேட்டை, முத்தைய முதலியார்பேட்டை பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் (44). இவர் எக்ஸ்ேபார்ட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சிபில் இல்லாமல் அடமானத்துக்கு லோன் கொடுப்பதாக விளம்பரம் செய்திருந்தனர். இதனை நம்பி கணேஷ் அந்த நிறுவனத்துக்கு சென்ற போது மேலாண் இயக்குனர் தேவசெல்வம், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஈஸ்வர் மற்றும் ஊழியர்கள் சிலர் குறைவான வட்டியில் பத்திரம் அடமானம் மூலம் லோன் தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கணேஷ் அவர்களிடம் ரூ.80 லட்சம் கடன் கேட்டுள்ளார். உடனே அவர்கள் கடன் தருவதாக கூறி, கடனுக்கான இன்சூரன்ஸ் மற்றும் சில காரணங்களுக்காக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் கேட்டது போல 3 தவணைகளாக அவர்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் மேலாண் இயக்குனர் தேவசெல்வம், கணேஷை தொடர்பு கொண்டு லோன் உங்களுக்கு தயாராகிவிட்டது. உடனடியாக கிடைக்க வேண்டுமென்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆகையால் கணேஷ் மேலாண் இயக்குனரை சந்தித்து ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். ஒரு வாரத்தில் ரூ.80 லட்சம் கிடைத்துவிடும் என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லை.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது சாக்குப்போக்கு கூறி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது அந்நிறுவனம் மூடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அக்கம் பக்கம் விசாரித்தபோது அந்த நிறுவனத்தை ஏற்கனவே மூடிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கணேஷ் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாட்சா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் இதேபோல் பலரிடமும் அந்நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் ஆசைவார்த்தை கூறி, பணத்தை ஏமாற்றியதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தேவசெல்வன், ஈஸ்வர் மற்றும் அந்நிறுவனத்தின் ஊழியர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

The post ரூ.80 லட்சம் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி எக்ஸ்போர்ட் தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ganesh ,Pilliyar Koil Road ,Muthiya Mudaliarpet ,Puduvai ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை