×

எல்நினோ நிகழ்வால் பருவமழை குறைய வாய்ப்பு உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் தகவல்

மும்பை: எல்நினோ நிகழ்வால் பருவமழை குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்த பருவமழையில் எல் நினோ நிகழ்வு உருவாகும் சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், பருவமழை குறைய வாய்ப்புள்ளது. இதனால் உணவு பொருட்கள் விளைச்சல் குறைந்து விவசாயம், நுகர்வு மற்றும் பொருளாதாரத்தை பெருமளவில் அச்சுறுத்தும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டியளிக்கையில் கூறியதாவது: வரும் 2024 நிதியாண்டில் பொருளாதாரம் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் உயர்த்தியது மற்றும் வினியோக தரப்பில் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு 7.8 சதவீதமாக இருந்த பணவீக்கம் 4.25 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டு இது 5.1 சதவீதமாக உயரலாம். ஆனால் அதை 4 சதவீதத்துக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டி விகிதத்துக்கும் பணவீக்கத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியால் பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கம் உயர்ந்தது.இந்தாண்டு வழக்கமான பருவமழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்நினோ குறித்த அச்சம் எழுந்துள்ளது. இது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என பார்க்க வேண்டும். இதர சவால்கள் அனைத்தும் பருவநிலை சம்பந்தப்பட்டதாகும்.உணவு பொருட்கள் விலை உயர்ந்து, உணவு பணவீக்கத்தில் அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

* வங்கிக்கு திரும்பிய ₹2000 நோட்டுகள்

சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், ‘‘ரூ.2000 நோட்டு வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்த பின்னர் வெளியில் புழக்கத்தில் இருந்த ரூ.3.62 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது ரூ.2.41 லட்சம் கோடி பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. அதில் 85 சதவீதம் டெபாசிட்டுகளாகவும் மீதி உள்ளவை பணம் பரிமாற்றம் மூலமும் வந்துள்ளன’’ என்றார்.

The post எல்நினோ நிகழ்வால் பருவமழை குறைய வாய்ப்பு உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Elnino ,Reserve Bank ,Governor Shaktikantadas ,Mumbai ,Governor Shaktikantdas ,
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...