×

மூடநம்பிக்கையால் முதியவர் கொலை

பேரையூர்: சேடபட்டி அருகே குடும்பத்திற்கு சாபம் விட்டதாக கூறி முதியவரை கொன்ற சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே குப்பல்நத்தம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ஆழி (70). சலவைத் தொழிலாளி. சின்னக்கட்டளையை சேர்ந்தவர் முத்தையா (70). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது ஆழி, முத்தையா குடும்பத்தினருக்கு சாபம் விடுவது போல் சில வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்தவர்கள், மிகவும் ஏழ்மையானவரின் சாபத்தை வாங்கிக் கொண்டீர்களே என்று கூறி அனுப்பியுள்ளனர்.

அதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் முத்தையாவின் இளைய மகன் முத்துராஜா டூவீலர் விபத்தில் பலியாக, மூத்த மகன் மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை சின்னக்கட்டளைக்கு வந்த ஆழியை மது அருந்த அங்குள்ள முனியாண்டி கோயில் நந்தவனத்திற்கு முத்தையா அழைத்து சென்றார். இருவரும் மது அருந்திய நிலையில் போதை அதிகமான முத்தையா, என் மகன்கள் இறந்ததற்கு நீ விட்ட சாபம் தான் காரணம் என கூறி மதுபாட்டிலை உடைத்து ஆழியின் தொண்டையில் குத்தி கிழித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குபதிந்து முத்தையாவை கைது செய்தனர்.

The post மூடநம்பிக்கையால் முதியவர் கொலை appeared first on Dinakaran.

Tags : BERAYUR ,Sethapatti ,Madurai District ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்