×

ஒரு மாதம் மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத மர்மம் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் இடுக்கி அணைக்கு மடைமாற்றமா?..டிரோன் மூலம் ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூர்: பெரியாறு அணைக்கு வரும் நீர் கேரளாவின் இடுக்கி அணைக்கு திசைமாற்றப்படுவதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாய் உள்ளது பெரியாறு அணை. 152 அடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையின், நீர்ப்பிடிப்பு பகுதியான 232.80 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் பெய்யும் மழைநீர் தான் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. தமிழகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால் 315 மி.மீ மழை, அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் 455 மி.மீ மழை, ஜனவரி, பிப்ரவரி ஆகிய குளிர் காலத்தில் 50 மி.மீ மழை, மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைகாலத்தில் 145 மி.மீ மழை என ஆண்டுதோறும் சராசரியாக 950 மில்லி மீட்டர் மழை கிடைக்கிறது.

தமிழகத்தில் கிடைக்கும் நீரில் 65% விவசாயத்திற்கும், 20% தொழிற்சாலைகளுக்கும், 10% குடிநீருக்கும், 5% இதர உபயோகத்திற்கும் செலவிடப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை 25ம் தேதியை கடந்தும் முறையாக இன்னும் தொடங்கவில்லை. அதேசமயம், மேற்குத்தொடர்ச்சி மலையின் உட்பகுதிகளில் ஒரு மாதமாக லேசான மழை பெய்து வருகிறது. ஆனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இயல்பு நிலைக்கும் மாறாக மிகக் குறைந்த அளவே வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி கூட உயரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத அதேவேளையில், பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு உபரி தண்ணீர் செல்லும் வழியான வண்டிப் பெரியாறு ஆற்றில் தண்ணீர் எப்போதும் போல இயல்பான அளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் கேரளாவின் இடுக்கி அணைக்கு வேறு வழியில் திசை மாற்றப்படுகிறதா என தமிழ்நாடு விவசாயிகள் அச்சப்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஒருவேளை தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகுமானால், இங்கு விவசாயம், குடிநீர், வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும். எனவே, ஒன்றிய நீர்வள ஆணையம், பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘ பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரளா மடை மாற்றுகிறது என்று பல ஆண்டுகாலமாக நாங்கள் குற்றம்சாட்டி வருகிறோம். பெரியாறு அணையின் உட்பகுதிக்குள் கட்கி, சபரிகிரி, ப்ளீச்சிங் டேம்களை எந்த சர்வதேச நீரியல் விதிகளின் கீழ் கேரளா கட்டியிருக்கிறது? இம்மாதத்தில் பல நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட பெரியாறு அணைக்கு வரத்து இல்லை. ஆனால், பெரியாறு அணையின் உபரி தண்ணீர் போக்கியான வண்டிப்பெரியாறு கம்பி பாலத்தின் வழியாக தண்ணீர் இடுக்கி அணையை நோக்கி எப்போதும் போல இயல்பாக சென்று கொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியமானது? பிரதான அணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத நிலையில் உபரி நீர் போக்கியில் 200 கன அடி தண்ணீர் எப்படி சாத்தியம்? எனவே, தமிழக அரசு பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 232.80 சதுர மைல் பகுதியை, கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் டிரோன் மூலமாக முழுமையாக ஆய்வு செய்து, இதில் உள்ள சதியை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

The post ஒரு மாதம் மழை பெய்தும் ஒரு அடி கூட உயராத மர்மம் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் இடுக்கி அணைக்கு மடைமாற்றமா?..டிரோன் மூலம் ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : KUDALUR ,Tamil Nadu ,Periyaru dam ,Kerala ,Ikki Dam ,Pliers Dam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு...