×

டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு: டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கருதுவதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். ஈரோடு அருகே கதிரம்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, இருப்புகள் சரியாக உள்ளனவா?, ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துள்ளனரா? என விசாரித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். இதனால், கூடுதல் விலைக்கு மது விற்பனை 100 சதவீதம் நடக்காது என்ற நிலை உருவாகும்.

விரைவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். தமிழ்நாட்டில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள், எந்த கடைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறதோ அங்கு பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களை வெளியில் அனுப்பும் திட்டம் இல்லை. தமிழ்நாட்டில் கண்ணாடி மதுபாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவது என்பது ஆலோசனையில் உள்ளது. அனைத்து துறைகள் சார்பாக விரிவாக ஆலோசித்து, அதன்பின் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமைச்சர் சு.முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Minister ,S. Muthuswamy ,Erode ,Muthusamy ,S.Muthusamy ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு