×

கலக்கத்தில் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அதிகாரியின் ரவுண்ட்டால அலர்ஜியில் இருக்கும் மாங்கனி மாவட்ட அதிகாரிகள் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல 4 மண்டல ஆபீசு இருக்காம். இந்த மண்டல ஆபீசுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில புதிய சாலை, சாக்கடை கால்வாய் அமைச்சுக்கிட்டு வாராங்க. புதிதா வந்த கமிஷனர், வார்டுகளுக்கு சென்று திட்டப்பணியை ஆய்வு செய்யறாராம். அப்போ சாலையின் தரம், அகலம், நீளத்தை அளந்து பார்த்து கரெக்டா இருக்கா என பார்க்கிறாரு. இதுல, சாலையின் தரம் சரியாக இல்லைனா நடவடிக்கை எடுத்திடுவேன்னு இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள பார்த்து கறாரா சொல்லிட்டாராம். இதனால இன்ஜினியர் பிரிவு அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கலக்கத்தல இருக்கங்க…’’ என்று ெசான்னார் விக்கியானந்தா. ‘‘லஞ்சம் வாங்கும் போது மட்டும் ஒரு பைசா குறையக்கூடாதுன்னு சொன்ன மாஜி இலை அமைச்சர் சிக்கல்ல இருக்காராமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சி ஆட்சியில் சேலத்துக்காரர் தூங்காநகரின் கலெக்டர் அலுவலகத்துக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட ₹24 கோடி ஒதுக்கி, 2018ல் அடிக்கல் நாட்டினாராம். கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லையாம். 2021 தேர்தலை மனதில் வைத்து, கட்டுமான பணிய வேகமா முடிக்க வேண்டும் என ஒப்பந்தக்காரரை, அப்போது அமைச்சராக இருந்த உதயம் விரட்டினார். மேலும், அப்போது அந்த பகுதி எம்எல்ஏவாக இருந்த செல்லம் தனக்கான பங்கு கேட்டு குடைச்சல் கொடுத்துள்ளார். இதனால் திட்ட மதிப்பீடு ₹30.19 கோடியாக உயர்ந்தது. கமிஷனும் சேர வேண்டிய கைகளுக்கு போய் சேர்ந்தது. 2021ல் ஆட்சி மாறிவிடும் என கருதிய இலை கட்சியினர், அவசர கோலத்தில் கட்டிடத்தை கட்டி முடிச்சாங்க. 2020 டிச. 4ல் சேலத்துக்காரர் நேரில் வந்து பில்டிங்கை திறந்து வைத்தார். ஆனால், உண்மையில் முழுமையான கட்டுமான பணி முடிய மேலும், 6 மாத காலம் இருக்கும் சூழ்நிலையில், 2021 ஜனவரியில், கலெக்டரை புதிய கட்டிடத்தில் உதயமானவர் குடியேற வைத்தார். அவசர கோலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் நாளுக்குநாள் அலங்கோலமாகி வருதாம். மழை பெய்தால் தண்ணீர் புகுந்து, ஆபீஸ் ரூமிற்குள் போயிடுதாம். கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, அதன் வழியாவும் மழை நீர் வருதாம். மழைபெய்தால் தண்ணீரை துடைக்க பெண் தூய்மை பணியாளர்கள் ஓடி வர்றாங்க. ₹30.19 கோடி மதிப்பிலான திட்டத்தில் முறையாக கட்டுமானப்பணிகள் நடந்து இருந்தால், மழை காலத்தில் பணியாளர்கள் துணியும் கையுமாக அலைய வேண்டியது இல்லைனு பேசிக்கிறாங்க. ஆனால் அதிகாரிகள் தரப்போ டெண்டர் 30 கோடிக்கு மேலே… கமிஷன் இன்ன பிற செலவுனு சொல்லி 5 கோடிக்கு மேலே சுரண்டிட்டாங்களாம். அதனால்தான் கலெக்டர் அலுவலகம் சின்ன மழைக்கே தாங்க என்று சாதாரண பொதுமக்களும் பேசிக்கிறாங்க. இந்த விஷயத்தை ஸ்மல் ெசய் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில குதிச்சு இருக்காங்களாம். கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த ஆவணங்கள பொதுப்பணித்துறையினரிடம் வாங்கி இருக்காங்களாம். இதனால், மதுரை மாவட்ட உதயம், செல்லம் உள்ளிட்ட இலை கட்சியின் முக்கிய தலைகள் கலக்கத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு பெண் அதிகாரிய கண்டாலே ஊழியர்கள் அச்சப்படுறாங்களாமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர், மிஸ்டர் பத்தூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பூ பெயரை கொண்ட பெண் அதிகாரி பொறுப்புல இருக்காங்க. அவரு எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருக்கிறாராம். இதனால கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தொடர்பா புகார் தெரிவிக்க யாரும் தொடர்பு கொள்ள முடியலையாம். இதனால டாஸ்மாக் கடைகள்ல உள்ள விற்பனையாளருங்க தைரியமாக மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்குறாங்க. இதுபோன்ற விதிமீறல்களை கண்டுக்காம இருக்க, பெண் அதிகாரிக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை சைலென்ட்டாக போகுதாம். அந்த லேடி அதிகாரியை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டமிட்டுள்ளதுதான், மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தில் ஊழியர்களின் பேச்சா இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எலக்‌ஷனுக்காக இறங்கி வந்த தலைவரு யாரு… எதற்காக இந்த ஸ்டாண்ட் எடுத்து இருக்காரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தாமரை கட்சி பொன்னானவர் நடவடிக்கை பெரிய அளவில் மாறி இருக்காம். கட்சிக்காரங்க நடத்தும் நிகழ்ச்சிக்கு சென்றால், அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை தனது பக்கத்தில் நிற்க வைத்த பிறகு தான் பிரஸ் கிட்ட பேசுறாராம். நலம் விசாரிப்பதிலும் அதிக அக்கறையுடன் இருக்கிறாராம். ஆனால் கட்சிக்காரங்க இதை வேறு மாதிரி பார்க்கிறாங்களாம். அண்ணன், பெரிய பதவியில இருக்கும் போது சரியா முகத்தை கூட பார்க்க மாட்டாங்க. ஆனால் இப்போது இவ்வளவு அக்கறையாக பேசுறாங்க. எலக்‌ஷன் வேற வருது. அண்ணனுக்கு சீட் கிடைக்குமானு தெரியல. தலைவரு, 2ம்தேதி வறாருல்ல, அன்றைக்கு அண்ணனை பற்றி பெருமையாக பேசினாருன்னா சீட் கன்பார்ம் என்று பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ எந்த பழத்தை தின்று.. எந்த ஆபிசர்கள்.. கொட்டையை எங்கே ேபாட்டாங்க…’’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை சிட்டியிலேயும், ரூரல்லயும் உயர் அதிகாரிகள்கூட ரொம்ப வருஷமா கோவையிலதான் இருக்காங்க. கோவையில எஸ்ஐ ஆக இருந்து இன்ஸ்பெக்டரான 10க்கும் மேற்பட்டவங்க கோவை வட்டாரத்திலதான் போஸ்டிங் வாங்கியிருக்காங்க. சிட்டிக்கும், ரூரலுக்கும் 20க்கும் மேற்பட்ட எஸ்ஐ, இன்ஸ்பெக்டருங்க மாறி மாறி போயிட்டு வர்றாங்க. இவங்கள ஏரியா விட்டு மாத்த முடியல. கோயமுத்தூர்ல திருட்டு, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, ஹவாலா கடத்தல், வாகன திருட்டு, நகை பறிப்பு, மோசடின்னு புகார் குவிஞ்சுட்டு வருது. ஒவ்வொரு வாரமும் சிட்டி ரூரல்ல குறை தீர்ப்பு கூட்டத்துல 200க்கும் மேற்பட்ட புகார் மனு குவியுது. ‘ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறவங்க என்னதான் பண்றீங்க’ன்னு உயரதிகாரிங்க கேட்டாலும் கவலைப்பட மாட்டீங்கறாங்க. பிரச்னைகள் அதிகமாக இருந்தும் ‘பழம் தின்று கொட்டை போட்ட’ ஆபீசர்கள மாத்த முடியலையாம். புதுசா திறந்த 4 போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், கோவையில் இருந்த அதிகாரிகள போஸ்டிங் போட்டுட்டாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post கலக்கத்தில் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Yananda ,Mangani ,Uncle ,Peter ,Mangani Corporation ,Dinakaran ,
× RELATED வழக்கமான இடத்திலேயே மாங்கனி கண்காட்சி