×

பெரம்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம்; திராவிடத்துக்கு துணிச்சலான தலைமை வந்து கொண்டுதான் இருக்கிறது: நடிகர் சத்யராஜ் பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நேற்றிரவு பெரம்பூரில் திரைக் கலைஞர், உரை கலைஞர், திராவிட கலைஞர் எனும் தலைப்பில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர்கள் பொன்வண்ணன், சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதில் நடிகர் பொன்வண்ணன் பேசுகையில், தமிழ் வரலாற்றில் நம்மாழ்வார்கள், சித்தர்கள், நாயன்மார்கள் போலவே திரைத்துறையில் இருந்தவர் கண்ணதாசன். அவருக்கும் கலைஞருக்குமான தொடர்பு திரைத்துறையில்தான் வளர்ந்தது. கலைஞருடனான நட்புக்கு பிறகு, தன்னை பகுத்தறிவுவாதியாக கண்ணதாசன் மாற்றிக் கொண்டார். சிவாஜி பகுத்தறிவுவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆர்.கூட சமூகநீதி படங்களைத் தேர்வு செய்தார். கலைஞரைப் போல் விமரிசனங்களை எதிர்கொண்டவர் யாருமில்லை. அதை அவர் நகைச்சுவையாக கடந்து சென்றுவிடுவார் என்று நடிகர் பொன்வண்ணன் தெரிவித்தார்.

வழக்கறிஞர் அருள்மொழி பேசுகையில், தமிழ்நாட்டில் இன்று கலைஞரை விமர்சித்து கருத்துகளை தெரிவிக்கும் படித்த உயர் அதிகாரிகள் மற்றும் சாதிவெறி பிடித்த பட்டதாரிகள் என அனைவரும் படித்ததற்கு காரணம், கலைஞர் உருவாக்கிய உயர்கல்வி திட்டங்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மணிப்பூர், காஷ்மீரைப் போல் தமிழ்நாட்டின் பெருமையை சிதைக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் நோக்கம். அதை தடுத்து, அவர்களுக்கு முதல் எதிரியாக தென்படுவது திராவிடர் தத்துவம். திராவிட தத்துவத்தை அழியாமல், அரணாய் நின்று காத்தவர் கருணாநிதி என்று வழக்கறிஞர் அருள்மொழி பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், மணிப்பூர் மாநிலத்தை போல் தமிழ்நாட்டை மாற்ற ஒருசிலர் நினைப்பதாக கூறினார்கள். தமிழ்நாடு ஒன்றும் மணிப்பூர் மாநிலம் கிடையாது. இங்கு அவர்களின் ‘பப்பு’ வேகாது. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கொடுத்துவிட்டால், அவர்களின் பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிடும் என போராடியவர் கருணாநிதி. தற்போதைய திமுக அரசு துணிச்சலான அரசாங்கம். அந்த துணிச்சலை 10 பக்க வசனங்களில் எழுதி காட்டவும் தெரியும். முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போல் பேசும் வார்த்தைகளில் துணிச்சலை பேசவும் தெரியும். சட்டசபையில் ஆளுநர் எழுந்து சென்றபோது, பல் தெரியாமல் சிரித்து, துணிச்சலை காட்டியவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திராவிடம், திராவிட மாடல் என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல… அது சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை விட்டு வெளியே வரமுடியாது. ஏனெனில், அனைத்து மக்களும் சமமாக இருக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் நிரந்தர இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் இயக்கம். திராவிடத்துக்கு துணிச்சலான தலைமை வந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, திராவிடம் உள்ளவரை தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது என்று சத்யராஜ் பேசினார். இதில் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், வர்த்தகர் அணி அமைப்பாளர் லயன் உதயசங்கர், சாமிக்கண்ணு, பரிமளம் உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம்; திராவிடத்துக்கு துணிச்சலான தலைமை வந்து கொண்டுதான் இருக்கிறது: நடிகர் சத்யராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : The Artist Century Festival ,Perampur ,Dravitta ,Satyaraj ,Dizhagam ,Eastern District of Chennai ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு