×

திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் பல்லவர் காலத்து கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பல்லவர் காலத்து சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் ஏரிக்கரை பகுதியில் கல்வெட்டுக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த த.ம.பிரகாஷ், ச.பாலமுருகன், மதன்மோகன், சி.பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா கிராம உதவியாளர் ஜெகந்நாதன் ஆகியோர் கள ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் தெரிவித்திருப்பதாவது:

திருவண்ணாமலை கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மெய்கண்டிஸ்வரமுடைய நாயனார் என்பவர் சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றான சிவனஞானபோதம் என்ற நூலின் ஆசிரியர் ஆவார். அவர், இவ்வூரில் எடுத்த சிவன் கோயில் குறித்து விசாரித்தபோது, அந்த கோயில் இல்லை என ெதரியவந்தது. ஆனாலும், சோழர் காலத்து சிவலிங்கம், நந்தி, கோயில் கல்தூண்கள் ஆகியவை ஆங்காங்கே உள்ளன.

இந்த கல்பலகைகள், சிவலிங்கம், நந்தி ஆகியவற்றின் சிற்ப அமைப்பு பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக இருப்பதாலும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு கூறும் காலத்துடன் பொருந்தி போவதாலும் இது மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் கோயிலில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த ஆய்வுக்கு உறுதி செய்யும் வகையில் அங்குள்ள ஒரு மரத்தடியில் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஒரு அடியாரின் சிற்பம் திருவண்ணாமலையை நோக்கி காணப்படுகிறது. இது, மெய்கண்டநாயனாராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

கல்வெட்டில், மெய்கண்ட தேவநாயனார் தன் பெயரில் மெய்கண்ட தேவப்புத்தேதி என்ற ஏரியை வெட்டு வித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய ஏரியில் வடபுறம் உள்ள 2 தூம்புகளில் ஒரு பக்கம் நந்தியின் கோட்டுருவமும் மற்றொன்றில் திரிசூலமும் உள்ளது. பெரிய ஏரியின் தென்கோடியில் உள்ள தூம்பில் ஒரு அரை வட்டகல்லில் 8ம் நூற்றாண்டு பல்லவ மன்னன் தந்திவர்மனின் 10 ஆட்சியாண்டு (பொஆ785) கல்வெட்டு ஒன்று உள்ளது.
இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது:

இது பல்லவ மன்னன் தந்திவர்மனின் 10ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்திவர்மனின் சீயமங்கலம் தூம்பு கல்வெட்டுக்கு பிறகு தென்மாத்தூர் தூம்புக்கல் வெட்டு தற்போது கண்டெடுக்கப்பட்டது.
இது பல்லவர்கள் இப்பகுதியில் நிர்மேலாண்மைக்கு கொடுத்த முக்கியத்துவம் இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும், தென்மாத்தூரின் மேற்கு பகுதியில் உள்ள பாறையில் குடை மற்றும் பாதம் கோட்டுருவத்துடன் பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த 4 வரி கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், அழியா விரதங்கொண்டநல்லூர் என்று மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

தென்மாத்தூர் கிராமத்தில் கிடைக்க கூடிய நந்தி, சிவலிங்கம், கோயில் கட்டுமான கற்தூண்கள், ஏரித்தூம்பு ஆகிய தடயங்கள் திருவண்ணாமலை கல்வெட்டில் குறிப்பிடும் திருவெண்ணைநல்லூர் மெய்கண்டதேவர் ஏற்படுத்தியதாக கருத இடமளிக்கிறது. அவ்வூரில் கிடைக்க பெற்ற அடியார் சிற்பம் மெய்கண்டதேவராக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். அழியா விரதங்கொண்டநல்லூர் என்ற கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் பல்லவர் காலத்து கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tenmathur ,Thiruvannamalai ,Tiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...